கெஜ்ரிவால் போட்ட திடீர் குண்டு... பீகார் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் நடந்தது என்ன?

Opposition Parties Bihar Joint Press Meet: மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் பீகாரில் நடைபெற்றது. கூட்டத்தில் என்ன நடந்தது, கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் பேசியது குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 23, 2023, 05:55 PM IST
  • சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12இல் இரண்டாவது கூட்டம் நடைபெறும்.
  • மக்களவை தேர்தலில் கூட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிப்பு.
  • பாஜக அடுத்து ஆட்சிக்கு வந்தால், அடுத்து தேர்தலே நடைபெறாது - மம்தா பானர்ஜி
கெஜ்ரிவால் போட்ட திடீர் குண்டு... பீகார் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் நடந்தது என்ன? title=

Opposition Parties Bihar Joint Press Meet: பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அடுத்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் மேலும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று 16 கட்சிகள் பங்கேற்ற எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு பின் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, கூட்டத்தில் பாஜகவை வீழ்த்தவதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்கட்சிகளின் கூட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கெஜ்ரிவால், ஸ்டாலின் இல்லை

எதிர்கட்சிகளுக்கு இடையே சுமார் ஒரு மணி நேர சந்திப்பில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்; தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் விமானங்களுக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்ததால் அவர்கள் வெளியேறியதாக நிதிஷ் குமார் கூறினார்.

ஆம் ஆத்மி போட்ட குண்டு

மறுப்புறம், எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், ஆம் ஆத்மி தரப்பில் பகிரங்கமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்காவிட்டால், ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற எதிர்வரும் எதிர்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் எனவும் அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்

காங்கிரஸ் - ஆம் ஆத்மி வாக்குவாதம்

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என விளக்கம் கோரியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆம் ஆத்மி செய்திதொடர்பாளரின் கருத்தை கூறித்தும் கூட்டத்தில் பேசியுள்ளார்.

"காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஒருமித்த கருத்து உள்ளது என்று நம்பத்தகுந்த ஆதாரங்களில் இருந்து தங்களுக்குத் தெரியவந்துள்ளது, அதனால்தான் இந்த அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை" என்று ஆம் ஆத்மியின் செய்திதொடர்பாளர் எம்.எஸ். கக்கார் இந்த எதிர்கட்சியினரின் சந்திப்புக்கு முன்னதாக கூறியிருந்தார். மேலும், சிம்லாவில் நடைபெறும் அடுத்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையேற்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அடுத்த கூட்டம் எப்போது?

இந்த எதிர்கட்சியினரின் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில்,"தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் சிம்லா கூட்டத்தில் இறுதி செய்யப்படும்" என்று நிதிஷ் குமார் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அடுத்த கூட்டம், ஜூலை 10 அல்லது 12ஆம் தேதியில் நடைபெறும் என்றும், இது அனைத்து மாநிலங்களுக்கான உத்தி குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார். "நாங்கள் 2024இல் தேர்தலில் ஒன்றாகப் போராட வேண்டும். பாஜகவை தூக்கி எறிய முடிவு செய்துள்ளோம், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் உறுதியாக உள்ளோம்" என்று கார்கே கூறினார்.

இது சித்தாந்தங்களின் சண்டை

ஜனநாயக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். "இது சித்தாந்தங்களின் சண்டை. எங்களிடம் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் எங்கள் சித்தாந்தத்தைப் பாதுகாக்க நெகிழ்வுத்தன்மையுடன் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இது ஒரு செயல்முறை, அதை நாங்கள் தொடருவோம்," என்றார். 

ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் போல்...

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், கலந்து கொண்ட கட்சிகள் ஒன்றாகப் போராடும் என்று உறுதிபடக் கூறினார். "பாட்னாவில் இருந்து தொடங்குவது ஜன் அந்தோலன் (பொது இயக்கம்) ஆக மாறுகிறது," என்று அவசரநிலையின் போது பெரும் இயக்கமாக உருவெடுத்த ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கத்தைக் குறிப்பிட்டார். டெல்லியில் நடந்த கூட்டங்கள் பலனைத் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

"மூன்று விஷயங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், நாங்கள் ஒற்றுமையாகப் போராடுவோம், எங்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் போராட்டம் என்று முத்திரை குத்தக்கூடாது, மாறாக பாஜகவின் சர்வாதிகாரம் மற்றும் அவர்களின் கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், அவர்களின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிரான போராட்டம். 

அடுத்த தேர்தலே நடக்காது

ராஜ் பவன் மாற்று அரசாங்கமாக நடைபெறுகிறது. எங்களை கலந்தாலோசிக்காமல், நம் மாநிலத்திற்கு நிறுவன தினத்தை ஏற்பாடு செய்தனர். அவர்களை எதிர்த்தால், அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு போன்றவற்றை நம் மீது ஏவுகின்றனர். நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களை அனுப்பி, எங்களை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்கிறார்கள், ஆனால் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசுவதில்லை. அவர்கள் வீடு அல்லது சாலைகளுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்களை சேர்ப்பதில்லை, மேலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் ஒரு தேர்தலே நடக்காது" என்று மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

"தேவைப்பட்டால் நமது ரத்தம் ஓடட்டும். ஆனால் நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்போம். வரலாறு மாற்றப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, ஆனால் பீகாரில் இருந்து வரலாறு காப்பாற்றப்படும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

மேலும் படிக்க | எதிர்க்கட்சிகள் கூட்டம்: மாயாவதி விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News