Post Office RD: தபால் அலுவலகத்தின் RD திட்டத்தின் மூலம், 8 லட்ச ரூபாய் வரை திரட்ட வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு, எவ்வளவு தொகையை மாதந்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கணக்கீட்டை இங்கு காணலாம்.
Post Office Recurring Deposit: இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 6.7 ஆக உள்ளது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால் தொழில் தொடங்குவோர், குழந்தைகளின் கல்விச் செலவுக்கு சேமிக்க விரும்புவோர் இதில் பணத்தை போடுவது நலம் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்...
சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் நடுத்தர மக்களுக்கு தபால் நிலையங்களில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத்தொகை திட்டம் (Post Office Recurring Deposit) திட்டமும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
நீங்கள் உங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை பாதுகாப்பாக, எவ்வித ரிஸ்கும் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டும் நினைத்தால் தபால் அலுவலகத்தின் இந்த தொடர் வைப்புத்தொகை திட்டம் பெரியளவில் கைக்கொடுக்கும்.
தற்போது இத்திட்டத்திற்கு 6.7% வட்டியாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் மாதந்தோறும் 100 ரூபாயை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
முதிர்வு காலத்திற்கு முன்னர் டெபாசிட் செய்த தொகை தேவையென்றால், தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டத்தின் வட்டியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதுவும் முதிர்வு காலத்திற்கு 1 நாள் முன் எடுத்தாலும் சரி. கணக்கு தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பின் அந்த கணக்கை வேண்டுமென்றால் நிறைவுசெய்துகொள்ளலாம்.
அந்த வகையில், உங்களுக்கு 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் நிதி திரட்ட வேண்டும் என்றால் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 8 லட்ச ரூபாய் வரை திரட்ட வேண்டும் என்றால் மாதம் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும், எத்தனை வருடங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கணக்கீட்டை இங்கு காணலாம்.
நீங்கள் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.3 லட்சத்தை மொத்தம் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கான வட்டி ரூ.56,830 ஆகும். எனவே மொத்தம் 5 ஆண்டுகளில் 3,56,830 ரூபாய் உங்கள் கணக்கில் இருக்கும்.
அதன்பின், இந்த கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அதேபோல் தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்தை அடுத்த ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் நீங்கள் ரூ.6 லட்சத்தை டெபாசிட் செய்திருப்பீர்கள். வட்டி மட்டும் ரூ.2,54,272 அளவில் சேர்ந்திருக்கும். எனவே, 10 ஆண்டுகளில் உங்கள் கையில் 8,54,272 ரூபாய் வந்துவிடும்.