டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!

Key Candidates & Constituency In Delhi: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தொகுதிகள் பட்டியல் குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 5, 2025, 12:24 PM IST
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்! title=

Delhi Election 2025 News: தேசிய தலைநகரம் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (பிப்ரவரி 5) வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளது. அதே வேளையில், 27 ஆண்டுகால கனவை மீண்டும் நனவாக்க முயற்சியில் பிஜேபி (Bharatiya Janata Party) தனது இலக்கு வகுத்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தீவிர முயற்சியில் உள்ளது. 

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை கடந்த திங்களன்று (பிப்ரவரி 3) அனல் பறக்கும் தொடர்ச்சியான பேரணிகளுடன் முடித்தன. 70 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.

டெல்லி சட்டமன்ற தேர்தலை பொறுத்து முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் குறித்து பார்ப்போம்.

புது டெல்லி சட்டமன்ற தொகுதி

அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) எப்போதும் புது டெல்லி தொகுதியில் (New Delhi Constituency) போட்டியிட்டுள்ளார். கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தப் போக்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறை, அவர் பிஜேபி வேட்பாளர் பர்வேஷ் வர்மா (Parvesh Verma) மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித்தை (Sandeep Dikshit) எதிர்த்துப் போட்டியிடுகிறார். முந்தைய தேர்தல் வெற்றிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி கவனிக்கப்பட்டது. கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் 21,687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறை எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் ஆம் ஆத்மி கட்சியின் நலத்திட்டங்களை தேர்தல் பிரச்சாரமாகப் பயன்படுத்தி அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார். இதில் பெண்களுக்கு ரூ.2,100 போன்ற மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அடங்கும்.

கல்காஜி சட்டமன்ற தொகுதி

டெல்லி கல்காஜி (Kalkaji Constituency) சட்டமன்ற தொகுதி ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானது, வெற்றிக்கான கடுமையான மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டும் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா சிங் (Atishi Marlena Singh) போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா (Alka Lamba) மற்றும் பாஜகவின் ரமேஷ் பிதுரி (Ramesh Bidhuri) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதியில் மொத்தம் 1,06,893 ஆண் வாக்காளர்கள், 87,617 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 திருநங்கை வாக்காளர்கள் உட்பட 1,94,515 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி இந்தத் தொகுதியை வென்றது. 2020 தேர்தலில், அதிஷி இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் பாஜகவின் தரம்பீர் சிங்கை 11,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஜங்புரா சட்டமன்ற தொகுதி

டெல்லி ஜங்புரா (Jangpura Constituency) சட்டமன்ற தொகுதியில் 2020 மற்றும் 2015 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் பிரவீன் குமார் தொடந்து வெற்றி பெற்றார். இருப்பினும், இந்தமுறை, கட்சி புதிய வேட்பாளரை மணீஷ் சிசோடியாவை (Manish Sisodia) களமிறக்கி உள்ளது. இவரை எதிர்த்து பாஜக தனது வேட்பாளராக தர்விந்தர் சிங் மர்வாவையும் (Tarwinder Singh Marwah), அதேநேரம் காங்கிரஸ் ஃபர்ஹாத் சூரியை (Farhad Suri) களம் இறங்கியுள்ளது. 2020 தேர்தலில், ஆம் ஆத்மி 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மால்வியா நகர் சட்டமன்ற தொகுதி

மால்வியா நகர் தொகுதியில் (Malviya Nagar Constituency) ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி (Somnath Bharti) மீண்டும் தேர்தலில் களம் இறங்கியுள்ளார். கடந்த 3 தேர்தல்களிலும் தனது போட்டியாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் சோம்நாத் பாரதி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாயும் (Satish Upadhyay), காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்திர குமார் கோச்சரும் (Jitendra Kumar Kochar) போட்டியிடுகிறார்கள்.

ரோகிணி சட்டமன்ற தொகுதி

ரோகிணி தொகுதியை (Rohini Constituency) பொறுத்த வரை ஆம் ஆத்மி கட்சிக்கும்,  பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 2013 மற்றும் 2015 தேர்தல்களில், இரு கட்சிகளுக்கும் இடையே வெற்றி வித்தியாசம் 5000 வாக்குகளுக்கு அருகில் மட்டுமே இருந்தது. பாஜகவின் 2 முறை வெற்றி பெற்ற (2015 மற்றும் 2020) விஜேந்தர் குப்தா (Vijender Gupta), ஆம் ஆத்மி வேட்பாளர் பிரதீப் மிட்டலுக்கு (Pradeep Mittal) எதிராக மூன்றாவது முறையாக இந்தத் தொகுதிக்கு போட்டியிடுகிறார். 2020 தேர்தலில் ஆம் ஆத்மியின் ராஜேஷ் நாமா பன்சிவாலாவை எதிர்த்து குப்தா 12,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்பர்கஞ்ச் சட்டமன்ற தொகுதி

டெல்லி பட்பர்கஞ்ச் (Patparganj Constituency) சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia) வெற்றி பெற்றதால், இந்தத் தொகுதி ஆம் ஆத்மியின் கோட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும், இந்தமுறை பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி (Ravinder Singh Negi) மற்றும் காங்கிரஸின் அனில் சவுத்ரி (Anil Chaudhary) ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மியின் வேட்பாளராக  அவத் ஓஜாவை (Awadh Ojha) நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு முன்பு, 1998 முதல் 2013 வரை காங்கிரஸ் தான் இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. 2020 தேர்தலில், மணிஷ் சிசோடியா 70,163 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

பல்லிமாறன் சட்டமன்ற தொகுதி

டெல்லியின் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் பல்லிமாறன்தொகுதி (Ballimaran Constituency) முஸ்லிம் வேட்பாளர்களின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் அதிக வாக்காளராக  முஸ்லிம்கள் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முஸ்லிம் முகமாக இருக்கும் தற்போதைய அமைச்சருமான இம்ரான் உசேனுக்கு (Imran Hussain) மீண்டும் டிக்கெட் வழங்கியுள்ளது. மறுபுறம், காங்கிரஸ் தனது நம்பிக்கையை மூத்த தலைவர் ஹாரூன் யூசுப் (Haroon Yusuf) மீது வைத்துள்ளது. அவர் கடந்த காலங்களில் பல முறை இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். ஷீலா தீட்சித் அரசாங்கத்தில் அவர் கேபினட் அமைச்சராகவும் இருந்தார். அதேபோல் பலமுறை முயற்சித்த போதிலும், பாஜகவால் இங்கு வெற்றி பெற முடியவில்லை. பாஜக தனது வேட்பாளராக கமல் பக்ரியை (Kamal Bagri) பல்லிமாறன் தொகுதிக்கு களம் இறங்கியுள்ளது. 

ஷகுர் பஸ்தி சட்டமன்ற தொகுதி

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஷகுர் பஸ்தி (Shakur Basti Constituency) தொகுதியில் பாஜக வேட்பாளராக டெல்லி கோவில்களின் தலைவராக இருக்கும் கர்னைல் சிங்கைத் (Karnail Singh) தேர்ந்தெடுத்துள்ளது. அவர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயினுக்கு (Satyendar Jain) எதிராக போட்டியிடுவார்.

ஓக்லா சட்டமன்ற தொகுதி

ஓக்லா தொகுதியில் (Okhla Constituency) ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமனத்துல்லா கான் (Amanatullah Khan) தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். ஆம் ஆத்மியின் அமனத்துல்லா கானுக்கு எதிராக போட்டியிட காங்கிரஸ் அரிபா கானை (Ariba Khan) இறங்கியுள்ளது. அதேபோல பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மணீஷ் சவுத்ரி (Manish Chaudhry), ஆம் ஆத்மி கட்சியின் வெற்றித் தொடரை முறியடிக்கும் முயற்சியில் உள்ளார்.  2020 மற்றும் 2015 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அமனத்துல்லா கான் பாஜக வேட்பாளர் பிரஹாம் சிங்கை 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேலும் படிக்க - Live: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தொடங்கியது வாக்குப்பதிவு!

மேலும் படிக்க - Live: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தொடங்கியது வாக்குப்பதிவு!

மேலும் படிக்க - டெல்லி தேர்தல் 2025: AAP VS BJP - அதி முக்கியமான 5 தொகுதிகள்... ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News