கலைஞருக்காகவும் தலைவருக்காகவும் உயிரை கொடுப்பேன்: 85 வயது திமுக தொண்டர்

இலங்கை தமிழர் மற்றும் சிறுபான்மைக்கு எதிரான அநீதியை எதிர்த்து போராட வந்த 85 வயது திமுக தொண்டர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 24, 2019, 09:34 AM IST
கலைஞருக்காகவும் தலைவருக்காகவும் உயிரை கொடுப்பேன்: 85 வயது திமுக தொண்டர் title=

சென்னை: நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தமிழ் நாடும் ஆகும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்தது. அதேபோல அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவும் ஆதரவாக வாக்களித்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள எதிர்கட்சி திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று பேரணி நடந்தது. சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் இந்த பேரணி நடந்தது. இந்த பேரணியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். 

பேரணிக்கு தலைமை தாங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடந்தது பேரணி மட்டுமல்ல, இது "போர் அணி" என மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் பேசினார். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக இன்னும் இதைவிட பெரியளவில் திமுக போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் ஸ்டாலின் கூறினார்.

திமுக பேரணியின் சிறப்பு என்னவென்றால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் என அனைத்து வயது உடையவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் 85 வயது உள்ள நாராயணப்பா என்ற முதியவர், கலைஞருக்காக என் உயிரையும் கொடுப்பேன். அதற்காக தான் பேரணியில் பங்கேற்க வந்துள்ளேன் என்று ஒரு திமுக தொண்டனான அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் அந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "நாராயணப்பா போன்ற தைரியமான பெரியவர்கள்தான் எங்களை வழி நடத்துகிறார்கள்" பெருமையுடன் கூறியுள்ளார். அவர் கூறியது, ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நாராயணப்பா என்ற 85 வயது பெரியவர், "கலைஞருக்காக, தலைவருக்காக வந்தேன்" என்கிறார். மக்களுக்கான போராட்டம் என்பது வன்முறையல்ல என்பதை உணர்ந்த தாத்தா நாராயணப்பா போன்ற தைரியமான பெரியவர்கள்தான் எங்களை வழிநடத்துகிறார்கள்" எனகக் கூறியுள்ளார்.

 

அந்த வீடியோவில் பெரியவரிடம் ஒருவர் கேள்விகளை கேட்கிறார். அதற்கு அவர் பதில் அளிக்கிறார். 

நபர்: உங்கள் பெயர் என்ன ஐயா? 

பெரியவர்: நாராயண குமார்.

நபர்: எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்? 

பெரியவர்: ஓசூர் சமத்துவபுரம்

நபர்: நீங்கள் திமுகவில் எத்தனை வருடமாக இருக்கிறீர்கள்? 

பெரியவர்: பரம்பரையாக இருக்கிறோம்.

நபர்: எத்தனை மணிக்கு சென்னை வந்தீங்க? 

பெரியவர்: காலையில் ரயில் மூலம் சென்னைக்கு வந்தேன். 

நபர்: எத்தனை வயது உங்களுக்கு?

பெரியவர்: 85 வயது ஆகுகிறது. 

நபர்: இந்த வயதிலும் போராட்டத்துக்கு வர வேண்டுமா? 

பெரியவர்: கலைஞருக்காக என உயிரை தியாகம் பண்ணவும் நான் ரெடி, 

நபர்: கலைஞர் தான் தற்போது இல்லையே? 

பெரியவர்: கலைஞர் இல்லை தான். ஆனால் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். அவருக்காக வந்தேன்.

நபர்: இந்த போராட்டம் எதுக்கு என்று தெரியுமா? 

பெரியவர்: இலங்கை தமிழர் மற்றும் சிறுபான்மைக்கு எதிரான அநீதியை எதிர்த்து போராட்டம்.

Trending News