Champions Trophy 2025, Team India: இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அடுத்த 45 நாள்களுக்கு கையில் பிடிக்க முடியாது எனலாம். வரும் பிப். 6ஆம் தேதி (நாளை மறுதினம்) இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது.
ஒருநாள் தொடர் முடிவடைந்து ஒரு வார இடைவெளிக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ளது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரோஹித், விராட், ஹர்திக் பாண்டியா, ஷமி என முன்னணி வீரர்கள் இதில் களமிறங்க இருக்கின்றனர். பும்ரா சாம்பியன்ஸ் டிராபிக்கு வருவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணி ரசிகர்களின் பெரிய ஆசை
ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 15 வீரர்களுக்கும் எவ்வித ரசிக சண்டைகளும் இன்றி சமமாக இருக்கும் எனலாம். ஏனென்றால், நீண்ட போராட்டத்திற்கு பின் 11 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டுதான் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியிருந்தாலும், அதற்கு முன் 2023 ஐசிசி உலகக் கோப்பையை தவறவிட்டது இன்னும் பல ரசிகர்களின் மனதில் வடுவாக பதிந்துவிட்டது. அந்த காயத்தின் வடுவை தணிக்க இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மட்டும்தான் ஒற்றை நிவாரணியாக இருக்கும்.
ரோஹித், விராட் சேர்ந்து ஒருநாள் அரங்கில் பல சாதனைகளை படைத்துள்ளனர். இருப்பினும், இவர்களின் தலைமையில் இந்திய அணி இன்னும் ஒருநாள் அரங்கில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 ஐசிசி உலகக் கோப்பை தொடர் ஆகியவை விராட் கோலி தலைமையில் முறையே இறுதிப்போட்டி மற்றும் அரையிறுதி வரை வந்து தவறிப்போனது. ரோஹித் தலைமையில் 2023 உலகக் கோப்பை தொடர்...
சாம்பியன்ஸ் டிராபி 2025: வருண் சக்ரவர்த்திக்கு இன்னும் வாய்ப்பிருக்கு...
எனவே அது இந்த முறை மிஸ்ஸாக கூடாது என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. அப்படியிருக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா வருவது உறுதியாகாதது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதை போல் வருண் சக்ரவர்த்தியை ஸ்குவாடில் சேர்க்காததும் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. ஆனால், வருங்காலத்தில் வருண் சக்ரவர்த்தியை சேர்க்க இன்னும் வாய்ப்பிருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025: ஸ்குவாடில் 5 ஸ்பின்னரா...?
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில்,"நாம் அனைவரும் வருண், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்திருக்க வேண்டுமா என்பது பற்றிப் பேசுகிறோம். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அனைத்து அணிகளும் தற்போது தற்காலிக அணியை மட்டுமே அறிவித்திருக்கிறது. அதனை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அவர் தேர்வு செய்யப்படலாம்.
ஆனால், தற்போது இருக்கும் ஸ்குவாடில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை வெளியேறிவிட்டுதான் வருணை உள்ளே கொண்டுவர முடியும். அப்படியென்றால் மொத்த ஸ்குவாடில் வருணையும் சேர்த்தால் 5 சுழற்பந்துவீச்சாளராக ஆகிவிடும். எனவே, வருணை சேர்க்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் நினைத்தால், அவர்கள் யாரை கைவிட விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி 2025: யாரை தூக்கலாம்?
எனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரில் வருண் விளையாட வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். அவரை நேரடியாக சாம்பியன்ஸ் டிராபிக்கு அழைத்துச் செல்வது எளிதான காரியம் இல்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. எனவே, இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அவருக்கு இங்கே ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், அது கடினமாகிவிடும்" என்றார்.
பிப். 11ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தற்காலிக அணியில் மாற்றம் செய்ய கால அவகாசம் உள்ளது. ஒருவேளை பும்ரா உடற்தகுதிபெறாவிட்டால் அவருக்கு பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்த்து, வாஷிங்டன் சுந்தருக்கு பதில் வருண் சக்ரவர்த்தியை விளையாட வைக்கலாம். அதுவே சரியானதாக இருக்கும்.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவார மாட்டாரா? வெளியான முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ