இந்திய அணி இங்கிலாந்தை 5வது டி20 போட்டியில் வீழ்த்தியதன் மூலம் பல சாதனைகள் படைந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தொடக்க வீரர் அதிரடியான சதம் விளாசினார். இத்தொகுப்பில் இப்போட்டியின் மூலம் முறியடிப்பட்ட சாதனைகள் என்னென்ன என்பது குறித்துதான் பார்க்கப்போகிறோம்.
நேற்று (பிப்02) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அபிசேக் சர்மா 52 பந்துகளில் 135 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டி20ல் அதிக ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில் சாதனையை முறியடித்தார். 2023ல் நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 126 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அபிசேக் சர்மா நேற்று (பிப்.02) 37 பந்துகளில் சதம் விளாசினார். இது இந்தியாவுக்காக அடித்த 2வது வேகமான சதம் ஆகும். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
அபிசேக் சர்மா நேற்றைய போட்டியில் 13 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் ஒரே டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவிடம் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இது டி20 வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு ஒரு மோசமான தோல்வியை அளித்துள்ளது. முன்னதாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இது இந்திய அணிக்கு டி20ல் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி ஆகும். 2023ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்சமாகும்.
இந்திய அணி 6.3 ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது. இதன் மூலம் புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2023ல் வங்கதேசத்திற்கு எதிராக 7.1 ஓவரில் 100 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி 10.3 ஓவரிலேயே ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் டி20ல் மிகக் குறைந்த ஓவரில் ஆல் அவுட்டான அணியாக மாறி உள்ளது.
இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. இது இந்திய அணியின் அதிகபட்ச பவர் பிளே ரன் ஆகும். டி20 வரலாற்றில் 6வது அதிக ரன்கள் ஆகும்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் 14 விக்கெட்களை எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் சால்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியும் 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது ஒரு வீரர் அரைசதம் அடித்தும் அந்த அணி மிக குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆவது மூன்றாவது முறையாகும்.