Pongal 2025: காலங்களை கடந்த கலாச்சாரம்.... மகிழ்ச்சி, செழுமையை பொங்கச்செய்யும் பொங்கல் திருவிழா!

Pongal 2025: தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த அறுவடை திருநாள் பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 9, 2025, 03:36 PM IST
  • தமிழர் திருவிழா பொங்கல்.
  • பொங்கலின் முக்கியத்துவம் என்ன?
  • களைகட்டும் நான்கு நாள் கொண்டாட்டம்.
Pongal 2025: காலங்களை கடந்த கலாச்சாரம்.... மகிழ்ச்சி, செழுமையை பொங்கச்செய்யும் பொங்கல் திருவிழா! title=

Pongal 2025: தமிழர் திருவிழா பொங்கல் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் திருவிழாவிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சுடன் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த அறுவடை திருநாள் பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றது. உலக மக்களை காத்து அருள் புரியும் சூரியனுக்கும், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கு துணை புரியும் விலங்குகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நன்னாளை நாம் கொண்டாடுகிறோம். 

தை மாத பிறப்பு

ஆண்டுதோறும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் திருவிழா கொண்டாடப்படும். தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. அறுவடை காலத்தில் விவசாயிகளின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் இந்த திருநாள் குறிக்கின்றது. பண்டைய இலக்கியங்களும், நூல்களும் பொங்கல் பண்டிகையை ஒரு சமூக கொண்டாட்டமாக, இயற்கைக்கான காணிக்கை காலமாக விவரிக்கின்றன.

பொங்கலின் முக்கியத்துவம் 

பொங்கல் திருநாள், தமிழக விவசாய மரபுகள் மற்றும் தமிழ் காலச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு நன்னாளாக பார்க்கப்படுகின்றது. ஜோதிட ரீதியாக பார்த்தால் இது சூரியன் மகர ராசிக்கு மாறும் தருணத்தை குறிக்கின்றது. ஆகையால் இது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் பயிர்களை வெற்றிகரமாக அறுவடை செய்ய உதவிய சூரியன், பூமி, கால்நடைகள் ஆகியவற்றுக்கு இந்த திருவிழா மூலம் நன்றி செலுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் பலர் ஒன்று கூடி பொங்கல் வைத்து புத்தாடை அணிந்து ஒருவருடன் ஒருவர் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு ஒன்றுகூடி இந்த திருநாளை கொண்டாடுவதால் இது ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு நன்னாளாக பார்க்கப்படுகின்றது.

நான்கு நாள் கொண்டாட்டம்

போகிப் பண்டிகை

பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இது பொங்கல் கொண்டாட்டங்களில் முதல் நாளாக பார்க்கப்படுகின்றது. பழைய பொருட்களை தீயில் இட்டு எரித்து புதியவற்றை நம் வாழ்வில் ஏற்றுக் கொள்வதே இந்த நாளின் முக்கியத்துவமாகும். பொருட்கள் மட்டும் அல்லாமல் நம் தேவையில்லாத பழமையான சிந்தனைகளை விடுத்து, புதிய சிந்தனைகளுக்கும் நல்லெண்ணங்களுக்கும் வழிவகுக்கும் நாளாக இது கருதப்படுகின்றது.

தைப்பொங்கல்

இரண்டாவது நாளான தைப்பொங்கல் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புது பானையில், பால், வெல்லம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி ஆகியவை கொண்டு பொங்கல் வைத்து, கரும்பு, காய்கள், பழங்கள், மற்ற உணவு வகைகளுடனும் சூரியனுக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இந்த உணவு அபரிமிதமான அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியனுக்கு வழங்கப்படுகிறது

மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளுக்காக இந்த பண்டிகை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, மலர்கள், ஆடை, ஆபரணங்காள் கொண்டு அலங்கரிக்கிறார்கள். மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு அவற்றுக்கு அன்று சிறப்பு விருந்து அளிக்கப்படுகின்றது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது மக்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியான வழியில் பொழுதை கழிக்கும் ஒரு நாளாக பார்க்கப்படுகின்றது. அன்றைய தினத்தில் மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வது வழக்கம்.

நவீன காலத்தில் பொங்கல் பண்டிகையில் சில மாற்றங்களும் வந்துள்ளன. பொங்கல் பானைக்கு பதிலாக கேஸ் அடுப்பில் குக்கர் அல்லது பிற பாத்திரங்களிலும் பொங்கல் வைக்கப்படுகின்றது. இந்த காலத்தில் பொங்கல் கொண்டாடப்படும் முறையிலும், பூஜைக்கான வழிகளிலும் பல மாற்றங்கள் வந்தாலும், இயற்கைக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அந்த நோக்கமும் பலர் ஒன்றாக கூடி ஒற்றுமையுடன் கொண்டாடும் விருப்பமும் இன்னும் மாறாமல் அப்படியேதான் உள்ளது. பல நூற்றாண்டுகளாக தமிழ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வரும் பொங்கல் பண்டிகையின் சாரம் இன்னும் அதே இனிப்புடன் கலாச்சார பெருமையை உணர்த்தி மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நீடித்த பிணைப்புக்கு சான்றாக உள்ளது.

மேலும் படிக்க | Pongal 2025: போகி முதல் காணும் பொங்கல் வரை... தெரிந்துகொள்ள வேண்டிய சடங்குகள்!

மேலும் படிக்க | Pongal 2025 Kolam: பொங்கலுக்கு இந்த கோலங்களை போடுங்க, தெருவே திரும்பிப்பார்க்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News