காமராஜரை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி -மோடி தாக்கு!

உங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். ‘நாளை நமதே, நாற்பதும் நமதே’ -மோடி

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Mar 6, 2019, 08:46 PM IST
காமராஜரை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி -மோடி தாக்கு! title=

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சி காமராஜரை எப்படி அவமானப்படுத்தியது என்பதை தமிழகம் மறக்காது" என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார் பிரேம் சிக்கியபோது அவரை மீட்டோம். பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தன் 2 நாட்களில் மீட்கப்பட்டார் என்பது உலகுக்கே தெரியும். 

பாஜக ஆட்சியில் 1900 மீனவர்களை மீட்டுள்ளோம், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுள்ளோம், சவுதி இளவரசருடன் பேசி 800 பேரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் லட்சியம். வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக விரும்பவில்லை என எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார். தொடர்ந்து பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

வலிமையான மாநில தலைவர்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை. தமிழக தலைவர் காமராஜரை காங்கிரஸ் எப்படி அவமானப்படுத்தியது என்பதை தமிழகம் மறந்திருக்காது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் அரசை கலைத்ததும் காங்கிரஸ் கட்சிதான்.ஏன் திமுக ஆட்சியையைம் கூட காங்கிரஸ் கலைத்துள்ளது. அரசியலுக்காக மாநில அரசுகளை கலைப்பது காங்கிரஸின் வாடிக்கை, ஆனால் அதைபற்றி கவலைப்படாமல் அதே காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது என தெரிவித்தார்.

ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், மூச்சையும் 130 கோடி மக்களுக்காக தான் செலவிட விரும்புவதாக தெரிவித்த மோடி., ஊழல்களை களைவதில் எந்த சமரசமும் கிடையாது. எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியிடம் அவர்களது தலைமை யார்? அவர்களது நோக்கம் என்ன? திட்டம் என்ன? என்பதை மக்கள் கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசினார். 

மேலும் உங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். ‘நாளை நமதே, நாற்பதும் நமதே’ என்று முழக்கமிட்டு உரையை முடித்தார்.

Trending News