Asia Cup 2023, Team India Playing XI: கிரிக்கெட் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆசிய கோப்பை தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் 4 போட்டிகள், இலங்கையில் 9 போட்டிகள் என இறுதிப்போட்டியை சேர்த்து மொத்தம் 13 போட்டிகள் உள்ள தொடரில், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன.
இதில், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள இரண்டு அணிகளுடன் தலா 1 முறை மோதும். பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர், அதில் இடம்பெறும் அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்தாண்டு ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடைபெறுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளதால் இந்த ஆசிய கோப்பை தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் குரூப் 'ஏ'-வில் இடம்பெற்றுள்ளன. நேபாளம் அணியும் அதே குரூப்பில் இடம்பிடித்துள்ளது.
மற்ற இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் 'பி'-யில் இடம்பிடித்துள்ளன. எனவே, எந்தெந்த அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் என்ற ஆர்வமும் அதிகம் காணப்படுகிறது. இந்த போட்டிகள் பகலிரவாக நடத்தப்டுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். இலங்கையில் நடைபெறும் மற்ற போட்டிகள் மதியம் 3 மணிக்கு தொடங்கும் என்பது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | அடிக்கடி பிளேயிங் லெவன் மாறுவது ஏன்? காரசாரமான கேள்விக்கு டிராவிட் ரியாக்ஷன்
யாருக்கு வாய்ப்பு?
இது ஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் இந்திய அணியில் மிக முக்கிய வீரர் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது. அதாவது, கே.எல். ராகுல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடைந்து, உடற்தகுதியை நிரூபிக்காத நிலையில், அவர் ஆசிய கோப்பையின் குரூப் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனவே, மிடில் ஆர்டரில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்பதால், மற்றொரு விக்கெட் கீப்பரை அணிக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படியென்றால், இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். இதில் இஷான் கிஷனுக்கே அதிகம் வாய்ப்புள்ளது. அவர் இடது பேட்டர் என்பதால் அது அணிக்கு பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது. அப்படி இஷான் கிஷனை எடுக்கும்பட்சத்தில், அவரை ஓப்பனராக களமிறக்குவதே சிறந்த தேர்வாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கில் vs விராட்
ஒருவேளை இஷான் ஓப்பனிங்கில் வந்தால், கில் 3ஆவது வீரராகவும், விராட் 4ஆவது வீரராகவும் களமிறங்க நேரிடும். விராட் 4ஆவது வீரராக களமிறங்குவது அணிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் கருத்துகள் நிலவுகின்றன. ஏனெனில், கில் 3ஆவது வீரராக சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடியதில்லை. அதே சமயம், விராட் 3ஆவது இடத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பெரியளவில் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். இது சற்று தலைவலியை அளிக்கலாம்.
மேலும், மற்றொரு வழியில் கில்லை பிளேயிங் லெவனில் இருந்து வெளியே வைக்க நினைத்தால், இஷானை ஓப்பனிங் கொண்டு வந்து, சூர்யகுமார் யாதவை மிடிலில் முயற்சித்து பார்க்கலாம். ஏனென்றால், இஷான் ஏற்கெனவே கீப்பிங்கில் உள்ளதால் சஞ்சு சாம்சனுக்கு இங்கு கதவடைக்கப்படும் நிலை வரும். மேலும், இதுகுறித்து மூத்த இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த கூறுகையில், கே.எல். ராகுல் ஆசிய கோப்பையிலேயே விளையாட வேண்டாம் எனவும், உலகக் கோப்பையில் நேரடியாக விளையாடலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கும் தேதி இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ