செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் - அண்ணாமலை வலியுறுத்தல்

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசை வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 31, 2022, 05:26 PM IST
  • செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
  • தங்கள் உயிரை துச்சமாக நினைப்பவர்கள் என அண்ணாமலை கருத்து
  • தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தவும் செய்திருக்கிறார்
செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் - அண்ணாமலை வலியுறுத்தல் title=

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து நோய் தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இவ்வாறு தமிழகத்தில் 14 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு சுமார் 6,000 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கான ஆணை கொரோனா தொற்று பெருகிவந்த காரணத்தால், 31-12-2022 வரையில் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 356ல், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு முன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்திய போது, பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்று தமிழக முதலமைச்சர் கூறினார். புத்தாண்டு தினத்தன்று பணி நிரந்தர ஆணை வரும் என்று எதிர்பார்த்திருந்த 6,000 செவிலியர்களுக்கு இடியாக வந்து இறங்கியது சுகாதாரத் துறையின் அரசாணை.

31.12.2022க்கு பிறகு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றுவார்களா என்ன?

உயிரை துச்சமாக கருதி பணி செய்த செவிலியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசை பாருங்கள். உடனடியாக 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பேனா வைக்க நிதி இருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா?... டிடிவி தினகரன் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News