Tamil Nadu Drone Land Survey | தமிழ்நாடு முழுவதும் நில அளவை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இம்முறை டிஜிட்டல் முறையில் நிலங்கள் அளக்கப்பட இருக்கின்றன. அதுவும் டிரோன்களை பயன்படுத்தி நிலங்கள் அளவீடு செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் “நக்சா” திட்டத்தின் மேற்கொள்ளப்படும் இந்த பணியினை அரியலூர் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா (NAtional geospatial Knowledge based land Survey of urban HAbitations - NAKSHA) திட்டமானது அரியலூர் நகரத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் பேணப்படும் சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இத்திட்டம் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் இன்றையதினம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image -ORI) உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்வொளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலங்களில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நிலஅளவை மேற்கொள்ளப்படும். பின்னர், நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு (DGPS மற்றும் ETS) நிலஅளவை செய்து புல வரைபடம் தயார் செய்யப்படும்.
நிலஅளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம், அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள் வெளியிடப்படும். மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பின்னர் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும்.
எனவே, நக்சா திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு நில உடமைதாரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தை தவிர சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் டிரோன்கள் மூலம் நிலஅளவை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | நடிகர் பிரகாஷ்ராஜ் ஆக நினைத்த அதிமுக Ex MLA தம்பி... தட்டி தூக்கிய போலீஸ்!
மேலும் படிக்க | பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ