பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான விளம்பரத் தூதராக நடிகர் விவேக்..!
தமிழகத்தில் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் அது தொடர்பாக ஒரு வலைத்தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்து பேசிய அவர், "தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு பரப்புரை விளம்பர தூதராக நடிகர் விவேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விவேக்கைத் தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட உள்ளனர். அவர்கள் ஷூட்டிங் இருக்கும் காரணத்தால் வர முடியவில்லை என தெரிவித்த்துள்ளனர்.
முதற்கட்டமாக ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக் கூடாது. அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தால் ஆரோக்கியமான வாழ்வு அமையும். தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என பேசினார்.
தொடர்ந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த குறும்படம், லோகோ, ஆகியவை வெளியிடப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், நடிகர் விவேக் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் பங்கேற்றனர்.