Saif Ali Khan Attack Case Latest News Updates: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபரை 30 மணிநேரத்தில் மும்பை காவல்துறையினர் கைது செய்து தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இங்கு காணலாம்.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் அந்த கும்பலை பார்ததும் பணிப்பெண் எழுப்பிய சத்தத்தை கேட்டு சைஃப் அலி கான் வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பியோடினார். இதனை அடுத்து சைஃப் அலி கான் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.
சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கேமராவில் சிக்கிய குற்றவாளி
அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சைஃப் அலி கானுக்கு முதுகுத்தண்டு, கழுத்து ஆகிய பகுதிகளிலும் கத்திக்குத்து காயம் இருந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இனி சைஃப் அலி கான் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என சைஃப் அலி கான் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சைஃப் அலி கான் தரப்பு அந்த கும்பல் வீட்டை கொள்ளையடிக்க முயற்சித்திருக்கலாம் என கூறினர்.
மேலும் படிக்க | சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவம்; வீட்டுப் பணிபெண் கூறும் திடுக்கிடும் தகவல்கள்
ஆனால், போலீசார் தரப்பு அதனை வெறும் கொள்ளை சம்பவமாக எடுத்துக்கொள்ளவில்லை. தாக்குதல் நடத்தியவரை அத்துமீறி ஊடுருவியவராகவே தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இதுதொடர்பாக நேற்றே தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சைஃப் அலி கான் வீட்டின் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சைஃப் அலி கான் வீட்டில் இருந்து பணியாளர்களிடமும் சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தப்பியோடிய நபரின் முக அடையாளம் தெரிந்தது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்ளில் வெளியிடப்பட்டது.
சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கத்தியால் குத்தியவர் சிக்கியது எப்படி?
குறிப்பாக, சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபர் பாந்த்ரா ரயில் நிலையம் அருகே இருந்ததாக தகவல்கள் வெளியாகின. போலீசாரின் கண்ணில் படாமல் இருக்க, அந்த நபர் ஆடையை மாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கலாம் என கூறும் போலீசார் தரப்பு, உடனடியாக 20 குழுக்களை அமைத்து அவர் சார்ந்த தொழில்நுட்ப தரவுகளை சேகரித்துள்ளனர். தொடர்ந்து, தங்களின் உளவாளிகள் மூலம் அந்த நபரை பிடிக்கவும் திட்டமிட்டனர்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய அந்த நபரை பிடிப்பதற்கு, வசாய் மற்றும் நலசோபராவில் போலீசார் குழுக்களாக முகாமிட்டிருந்தனர். பாந்த்ராவில் உள்ள 12 மாடிகள் கொண்ட 'சத்குரு ஷரன்' கட்டடத்தில்தான் சைஃப் அலி கான் குடியிருப்பும் அமைந்துள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4 மாடிகள் சைஃப் அலி கானுக்கு சொந்தமானது. அங்கு அவர்கள் வீட்டை கொள்ளை அடிக்க முயற்சித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: வீட்டு பணியாளர்களை சந்தேகிக்கும் போலீசார்
மேலும், அந்த குடியிருப்பில் இருந்த எந்த சிசிடிவி கேமராவிலும் சிக்காமல் அந்த தாக்குதல் நடத்திய நபர் வீட்டிற்குள் நுழைந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அதாவது, சைஃப் அலி கான் வீட்டில் பணியாற்றும் ஒருவருக்கும், இந்த தாக்குதல் நடத்தியவருக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் அவர்தான் குற்றவாளியை கேமராவில் சிக்கவைக்காமல் வீட்டிற்குள் அனுமதித்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். மேலும், சைஃப் அலி கான் குடியிருப்பு குறித்து அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது என்றும் அவர்கள் அருகில் வளாகத்தின் சுவரை அடைந்து, அங்கிருந்து சைஃப் அலி கான் குடியிருப்பில் உள்ள தீயணைப்பு பைப் மூலம் மேல் மாடியை அடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கத்தியால் குத்திவிட்டு தப்பித்தது எப்படி?
அந்த கட்டடத்தின் 11வது மாடியில் அவர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் வீடு புகுந்து சுமார் அரைமணி நேரம் அவர்கள் அந்த வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரே, வீட்டில் பணியாற்றுபவர்களும், சைஃப் அலி கானும் சேர்ந்து அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். மேலும், சைஃப் அலி கானின் இளைய மகன் ஜேவை பராமரிப்பு பணியாளரான அந்த பெண் கொள்ளையர்களை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து படிக்கட்டு வழியாக தப்பியோடிய அந்த நபர் கட்டடத்தின் 6வது மாடியில் உள்ள சிசிடிவில் சிக்கினார். அதில் அவரது முகம் தெளிவாக பதிவாகியிருந்தது. மேலும், அவர் முழுவதுமாக படிக்கட்டுகளில் செல்லாமல் தீயணைப்பு பைப் வழியாக இறங்கி அங்கிருந்து தப்பித்துவிட்டார். இதனால்தான், கீழே இருந்து பாதுகாவலர்களிடம் அவர் சிக்கவில்லை.
பிரபலங்கள் நிறைந்த பாந்த்ரா பகுதியில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், மும்பை நகரின் சட்ட ஒழுங்கு குறித்தும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளனர். மும்பை காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கு கொள்ளை, அத்துமீறி நுழைந்தது, கடுமையான காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ