Weight Loss Mistakes: உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் கூறும் பொதுவான விஷயம், நாங்கள் மிகவும் குறைவாக தான் சாப்பிடுகிறோம், ஆனால் உடல் எடை என்னமோ குறைவதில்லை என்பதுதான். இதற்கான சில முக்கிய காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
உடல் பருமனை குறைப்பது சிறிது சவாலான விஷயமாகத்தான் உள்ளது. பெரும்பாலானோருக்கு, கடும் முயற்சி எடுத்தாலும் உடல் பருமன் தொப்பை கொழுப்பு ஆகியவை குறைவதில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. அது பல சமயங்களில் சலிப்பாகவும் மாறுகிறது.
உடல் பருமன் ஒரு நோய் இல்லை என்றாலும், அது பலவித நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. அதனால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் பெரும்பாலானோர், நாங்கள் மிகவும் குறைவாக சாப்பிட்டாலும், உடல் எடையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஏமாற்றம் அடைகின்றனர். இதற்கு அவர்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம் என்று, உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பன்னீர்: பொதுவாக பன்னீரில் அதிக புரதச்சத்து உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதில் கலோரிகளும் அதிகம். அதோடு சந்தையில் வாங்கும் பேக் செய்யப்பட்ட பன்னீரில், அதிக அளவு கொழுப்பு மற்றும் கல்லூரிகள் உள்ளன. எனவே இவற்றை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும்.
பழச்சாறுகள்: பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸாக அருந்துவது உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது. ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகம். அதோடு நார்ச்சத்தை நாம் இழந்து விடுகிறோம். ஜூஸ் எளிதில் ஜீரணம் ஆகி, பசியை உடனே ஏற்படுத்தும். இதற்கு பதிலாக மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி அருந்துவது பலன் தரும்.
தேநீருடன் பிஸ்கட்: பலருக்கு டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் வழக்கம் உள்ளது. பிஸ்கட் என்பது ஆரோக்கியமான உணவு என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பிஸ்கட்டுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ளன. இது உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது.
சுவையூட்டப்பட்ட தயிர்: தயிர் சிறந்த ப்ரோ பயோடிக் உணவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சந்தையில் கிடைக்கும் சுவையூட்டப்பட்ட தயிரில் மிக அதிக அளவு கலோரிகள் உள்ளன. ஏனென்றால் இதில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது.
பீனட் பட்டர்: வேர்க்கடலை வெண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது தான். அது அத்யாவசிய ஊட்டச்சத்துக்களுடன், ஆரோக்கியமான கொழுப்பையும் கொண்டது. ஆனால் இவற்றில் கலோரிகளும் அதிகம் உள்ளன. இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணையில் 190 கலோரிகள் உள்ளன. எனவே இதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்: பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டால் பாதிப்பு இருக்காது என்று நம்மில் பலர் எண்ணுகிறோம். ஆனால் ஒரு ஸ்பூன் எண்ணெயில், சுமார் 150 கலோரிகள் உள்ளன. எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை, குறைவாக எடுத்துக் கொண்டாலும் அது உடல் பருமனை அதிகரிக்கும். இதனை எப்போதாவது ஒருமுறை உட்கொள்வதே சிறந்தது.
அளவிற்கு அதிக ஆரோக்கிய உணவு: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உணவுகள் என்றாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும். இது பருப்பு வகைகள், பழங்கள், உலர் பழங்கள் என அனைத்திற்கும் பொருந்தும். எனவே அனைத்து சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவே சிறந்த தேர்வாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.