TN Milk Price Hike: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் அதன் பால் விலையை திடீரென உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
பால் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசின் ஆவின் பால் (Aavin Milk) விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்களின் தயாரிப்புகளும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. தற்போது தனியார் நிறுவனத்தின் பால் விலையே அதிகரித்துள்ளது. இதனால், டீ - காபி கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், உணவகங்கள், கடையில்லாமல் சைக்கிள் மற்றும் தள்ளுவண்டிகளில் டீ - காபி விற்பவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் எனலாம்.
ஒவ்வொரு மாதம் பிறக்கும்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையில் மாற்றம் இருக்கும். கடந்த பிப். 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7 வரை குறைந்திருந்தது.
இது ஒரு புறம் இருக்க, பிப். 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதாவது, பாலின் விலை 2 ரூபாய் மற்றும் தயிரின் விலை 5 ரூபாய் அளவில் உயர்த்த தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், 6% கொழுப்புச் சத்துள்ள ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் ஆரோக்கியா முழு கிரீம் பாலின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் ஆரோக்கியா முழு கிரீம் பால் ஒரே லிட்டரின் விலை 69 ரூபாயில் இருந்து 71 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதே நேரத்தில், ஆரஞ்சு நிற பாக்கெட்டின் அரை லிட்டர் 37 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இருப்பினும், தயிர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மற்ற பால் பொருள்களில் விலையில் மாற்றம் வந்துள்ளதா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
ஆரோக்கியா பாலின் இந்த திடீர் விலை ஏற்றத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த ஆரஞ்சு பாலின் விலை நவம்பரில் ரூ.65இல் 67 ஆக உயர்ந்தது, இடையே ரூ.67இல் இருந்து ரூ.69 ஆக உயர்ந்தது. தற்போது வெறும் 3 மாத இடைவெளியில் ஆரோக்கியாவின் ஆரஞ்சு நிற பாக்கெட் 6 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.