பெங்களூரு: இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், அண்மையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதை அடுத்து, கடந்த ஜூலை 18 (வியாழக்கிழமை) அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு நாட்களாக வாக்கெடுப்பை நடத்தாமல் கால தாமதம் செய்து வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டம் உட்பட பல எதிர்ப்பை பாஜகவினர் ஆளும் கர்நாடக அரசுக்கு எதிராக அரங்கேற்றினர்.
நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமி மற்றும் சபாநாயகருக்கு 2 முறை ஆளுநர் கடிதம் அனுப்பியும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.
இந்தநிலையில், இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்பொழுது சபாநாயகர் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவையில் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கர்நாடக சட்டப்பேரவை அமைத்துள்ள பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அடுத்த 48 மணி நேரத்திற்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.