சுலபமாக கோடீஸ்வரராக்கும் PPF திட்டம்: தினமும் ரூ.405 சேமித்தால் போதும்

Public Provident Fund: அரசாங்கம் நடத்தும் இந்த முதலீட்டு திட்டத்தில் குறைந்தபட்சமாக வெறும் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை துவக்கலாம். இதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 12:31 PM IST
  • பிபிஎஃப் கணக்கை எப்படி தொடங்குவது?
  • இதில் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்?
  • இந்த திட்டத்தில் பாதியிலேயே பணத்தை எடுக்க முடியுமா?
சுலபமாக கோடீஸ்வரராக்கும் PPF திட்டம்: தினமும் ரூ.405 சேமித்தால் போதும் title=

Public Provident Fund: நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -இல் முதலீடு செய்கிறார்கள். அரசாங்கத்தின் உத்தரவாதம் இந்த திட்டத்தில் இருப்பதே இதற்கு பெரிய காரணமாக உள்ளது. இதில் நமது பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நல்ல வருமானமும் கிடைக்கின்றது. இது நம் நாட்டில் உள்ள மிகப் பிரபலமான ஒரு சேமிப்பு திட்டமாக உள்ளது. எனினும் இந்த திட்டத்தில் உள்ள பல முக்கிய அம்சங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டத்தின் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

PPF: அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச முதலீட்டு விவரங்கள்

அரசாங்கம் நடத்தும் இந்த முதலீட்டு திட்டத்தில் குறைந்தபட்சமாக வெறும் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை துவக்கலாம். இதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும். ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி கிடைக்காது. இந்தத் திட்டத்தில் நாம் மொத்தமாகவோ அல்லது தவணைகளிலோ டெபாசிட் செய்யலாம். 

PPF: இந்த திட்டத்தில் வரி விலக்கு கிடைக்குமா? (Tax Exemption in PPF)

PPF திட்டத்தின் சிறப்பம்சமே இதில் கிடைக்கும் வரிவிலக்கு (Tax Exemption) தான். இதன் காரணமாக இது அலுவலக பணிகளில் பணிபுரியும் பணியாளர்களிடம் மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது. பிபிஎஃப் -இல் பணத்தை டெபாசிட் செய்தால் நல்ல வருமானம் கிடைப்பதோடு நமக்கு வரி விலக்கும் கிடைக்கிறது. வருமான வரி சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 80C -இன் கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் தொகை, அதில் கிடைக்கும் வட்டி, முதிர்வுக்கு பிறகு அதாவது மெச்யூரிட்டிக்கு பிறகு நமக்கு கிடைக்கும் மொத்த தொகை என இந்த மூன்றுக்கும் வரி விலக்கு உண்டு. பிபிஎஃப் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு நாம் முதலீடு செய்ய வேண்டும்.

PPF: இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி எவ்வளவு (PPF Interest Rate)

பல வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களை விட, பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நமக்கு அதிக வட்டி (Interest) கிடைக்கிறது. தற்போது அரசாங்கம் வருடாந்திர வட்டியாக 7.1% அளிக்கின்றது. வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் முதலீட்டில் கூட்டு வட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வட்டி பணம் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் (Interest Rate) மதிப்பாய்வு செய்யப்படுகிறது. வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை நிதி அமைச்சகம் எடுக்கின்றது.

மேலும் படிக்க | Roen Olmi காளான் உணவு மட்டுமில்லை! தங்கத்தை உருவாக்கும் ஃபேக்டரி! விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

PPF: இந்த திட்டத்தில் பாதியிலேயே பணத்தை எடுக்க முடியுமா? (PPF Withdrawal)

இந்தத் திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகளாக இருந்தாலும் அவசர தேவைகளுக்காக முதலீட்டாளர்கள் இதில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையில் 50% வரை எடுக்கலாம். எனினும் பணத்தை எடுக்க கணக்கு தொடங்கி ஆறு வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு தான் பிபிஎஃப் தொகையை (PPF Amount) எடுக்க முடியும்.

PPF: இதில் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்?

அரசாங்க விதிகளின்படி 15 ஆண்டுகளுக்கு PPF -இல் முதலீடு செய்ய வேண்டும். மெச்யூரிட்டி காலத்திற்கு பிறகும் ஒருவர் முதலீடு செய்ய விரும்பினால் பிபிஎஃப் கணக்கை (PPF Account) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். மெச்சூரிட்டி காலத்திற்கு ஒரு வருடம் முன்பு நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

பிபிஎஃப் கணக்கை எப்படி தொடங்குவது? (How To Open PPF Account)

பிபிஎப் கணக்கை அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் திறக்கலாம். இதற்கு இந்திய குடிமகனாக இருப்பது கட்டாயமாகும். மைனர் குழந்தைகளின் பெயரிலும் பிபிஎஃப் கணக்கை தொடங்கலாம். எனினும், அந்த குழந்தைகளுக்கு பாதுகாவலர்கள் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். கணக்கில் ஈட்டப்படும் வருமானம் பெற்றோரின் வருமானத்தில் சேர்க்கப்படுகிறது/

PPF மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி? (How to become a Millionaire through PPF)

இந்த திட்டத்தில் சிறிது சிறிதாக சேமித்து நாளடைவில் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம். இதற்கான சூத்திரம் மிகவும் எளிதானது. ஒரு முதலீட்டாளர் தினமும் ரூ.405 அதாவது ஆண்டுக்கு ரூ.1,47,850 சேர்த்தால், தற்போதைய வட்டி விகிதமான 7.1% அடிப்படையில் 25 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 கோடியை சேர்க்க முடியும். 

பிபிஎஃப் திட்டத்தில் கடன் வசதி கிடைக்குமா?

பிபிஎஃப் கணக்கை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆன பிறகு இதில் ஒருவர் கடன் பெறலாம். கணக்கை தொடங்கி மூன்று முதல் ஆறு ஆண்டுகளுக்குள் கடன் வசதி கிடைக்கும். எனினும் இரண்டாவது முறையாக கடன் பெற வேண்டும் என்றால் முதல் கடனை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையில் 25 சதவீதம் வரை மட்டுமே கடன் கிடைக்கும். பிபிஎஃப் -இல் கிடைக்கும் கடனுக்கு 2% அதிக வட்டியை செலுத்த வேண்டும். அதாவது பிபிஎஃப் -இன் (PPF) தற்போதைய வட்டி விகிதம் 7.1% என்றால் முதலீட்டாளர் கடனாக பெரும் தொகைக்கு 9.1% வட்டி செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 36 மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த விதிகளை மறந்துடாதீங்க... பிறகு சிக்கல்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News