நடப்பு நிதியாண்டில், நாட்டின் மிகப்பெரிய வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றான HDFC லிமிடெட் நிறுவனத்தின் சுமார் 1.75 கோடி பங்குகளை பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (PBoC) வாங்கியுள்ளது.
செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, சீனாவின் மத்திய வங்கி 1,74,92,909 கோடி அல்லது நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. நிறுவனம் இந்த தகவல்களை பங்குச் சந்தைகளுக்கு வழங்கியுள்ளது. சமீபத்திய வாரங்களில் நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட நேரத்தில் இந்த பங்குகளை வாங்கும் நிகழ்வு நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரம் முதல் இன்று வரை நிறுவனத்தின் பங்குகள் 41 சதவீதம் சரிந்துள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை HDFC பங்குச் சந்தைகளுக்கு கிடைத்த காலாண்டு தரவுகளின்படி, சீனாவின் மத்திய வங்கி மார்ச் மாத இறுதியில் நிறுவனத்தின் 1.75 கோடி பங்குகளை வைத்திருந்தது,. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்தது குறித்த கவலைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் மட்டுமே நிறுவனத்தின் பங்குகள் சுமார் 25 சதவீதம் சரிந்தன என்பது குறிப்பிடத் தக்கது. BSE-யின் 30 பங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முக்கிய குறியீடான சென்செக்ஸில் இந்த ஆண்டு மிக மோசமாக செயல்படும் பங்குகளில் HDFC ஒன்றாகும்.
இந்த பெரிய கொள்முதல் தொடர்பாக ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, சீனாவின் மக்கள் வங்கி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. சீனாவின் மத்திய வங்கி BP Plc மற்றும் ராயல் டச்சு ஷெல் Plc போன்ற முக்கிய நிறுவனங்களிலும் பங்குகளை வைத்திருக்கிறது. அதே நேரத்தில், கொரோனா வைரஸ் காரணமாக பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டதால், ஆசியாவின் பல பெரிய நிதி நிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்கியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகளில் சீனா தனது முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. முக்கியமாக சீனா உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதாக தெரிகிறது.