தவறு நடந்த 46 இடங்களில் 3-லும் ஏற்கனவே பரிந்துரைத்த 10 இடங்களையும் சேர்த்து 13 இடங்களிலும் மே 19 மறுவாக்குப்பதிவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது. இந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்கப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துறை செய்தார்.
இந்நிலையில் தற்போது தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடி, கடலூர், ஈரோடு மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிரப்பிதுள்ளது. மறுவாக்குப்பதிவு ஆனது வருகிற 19-ஆம் தேதி நடைபெறுமென ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுமெனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில்; "வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தலைமை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். தேர்தலுக்கு முந்தைய மாதிரி ஓட்டுப்பதிவுகள் அகற்றப்படவில்லை. ஓட்டு எண்ணிக்கையின் போது பிரச்னை ஏற்படும் என்பதால், 13 ஓட்டுச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவறு நடந்த 46 ஓட்டுச்சாவடிகளில் மூன்றிலும், ஏற்கனவே பரிந்துரை செய்த 10 ஓட்டுச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடக்கும்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல் நடத்தப்படும். மறு ஓட்டுப்பதிவிற்காக தான் ஓட்டு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேவையான இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனி, ஈரோட்டிற்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டன. இது அரசியல் கட்சிகளுக்கு தெரியும். ஓட்டுப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். வேலூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தகவல் இல்லை.
அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளில் மொத்தம் உள்ள2,75,614 ஓட்டுகளில் ,1,85,022 ஓட்டுகள் வந்தன. தபால் ஓட்டுகளை அனுப்ப அவகாசம் உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.