அதிமுகவில் தற்போது சலசலப்பு நிலவி வரும் நிலையில் கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பிளவு பட்டுள்ள அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணமாக உள்ளதாகவும், தனிப்பட்ட நபர்களின் ஈகோவை ஒதுக்கிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "உதயகுமார் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் பேசும் மொழி என்பது அனைவருக்கும் தெரிந்தது. மக்கள் கவனித்துக் கொள்வார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுக கட்சியை நிறுவியது முதல் செங்கோட்டையன் கட்சிக்காக பல்வேறு நிலைகளில் குரல் கொடுத்து வருபவர். நானும் அவருடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைப்பவராக அவர் உள்ளார்" என்றார்.
மேலும் படிக்க | எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் இத செஞ்சு காட்டுங்க - சவால் விட்ட முன்னாள் எம்பி!
அவரை சந்தித்து பேசுவீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை. மேலும், "அதிமுக தொண்டர்களின் எண்ணமாக கட்சி மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே உள்ளது. பொதுமக்களும் அதையே விரும்புகின்றனர். அதனுடைய வெளிப்பாடுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்தது. அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்பதற்காக, அதிமுகவின் விசுவாசம் மிக்க தொண்டர்கள் அனைவரும் எங்களோடு இருக்கின்றனர். இதை நிரூபிக்க தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு பதிவான 10 லட்சம் வாக்குகளில் 33 சதவீதம் வாக்குகளை நான் பெற்றேன். அதிமுக தொண்டர்களும் மக்களும் எங்களோடு தான் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும். எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைத்தேர்தலில் கூட போட்டியிடுவதற்கு பய உணர்வு உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்" என தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்துள்ள கருத்துக்கு பதில் அளித்தவர், "பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு என ஒவ்வொரு அளவுகோல் உள்ளது. அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்குகிறது" என்றார். மேலும், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலம் வரை இரு மொழி கொள்கைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதேபோல் நான் முதல்வராக இருந்த போதும் சட்டமன்றத்தில் இரு மொழிக் கொள்கை தான் என பேசி உள்ளேன். 1965 மொழிப்போர் மற்றும் அப்போது துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் ஆட்சி என நீண்ட திராவிட வளர வரலாறு இதில் உள்ளது. இருமொழிக் கொள்கைதான் நமது மாநிலத்தின் கொள்கை" என்றார்.
மேலும் பேசியவர், "நான் வைக்கக்கூடிய கருத்துக்கள் அனைத்தும் ஆலோசனையாகவும் அறிவுரையாகவும் தான் உள்ளது. அதுவே அவர்கள் கடுமையான கருத்துக்களை கூறுகின்றனர். நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்" என்றார். அமித்ஷா சந்திப்பு குறித்து பேசியவர், அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர தேர்தல் வியூகத்திற்காக அமித்ஷா என்னையும் இபிஎஸ்ஸையும் அழைத்து பேசியிருந்தார். அதை ஏற்காததன் விளைவு அனைவருக்கும் தெரியும். இதில் ரகசியம் எதுவுமில்லை. கண்டிப்பாக ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறினார். மற்றவை அனைத்தும் பரம ரகசியம். பிளவு பட்டுள்ள அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா தந்த நல்லாட்சி மீண்டும் தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக தனிப்பட்ட ஈகோவை விட்டு, கட்சிக்காக செயல்பட தயாராக உள்ளோம். இந்த கருத்தோடு இருப்பவர்களிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். பலரும் என்னிடம் பேசி வருகின்றனர். வசை பாடுபவர்கள் நீண்ட நாள் வாழட்டும் என வாழ்த்துகிறேன்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ