சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!
கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் நாள் மாலை சபரிமலை ஐய்யப்பன் கோயில் திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாள் முதலே பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் சபரிமலையில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கேரளா முழுவதும் போராட்ட களமாய் உருமாறியுள்ளது.
போராட்டங்களால் கேரளா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவினை கேரளா காவல்துறையினர் பிறப்பித்தனர். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு வார காலத்திற்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று முடிவடையும் நிலையில், தற்போது மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 21-ஆம் நாள் சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து பாஜக முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக குமரியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும்ர அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.