DMK Minister Moorthy | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை காளையர்கள் தீரமுடன் அடக்கினர். அதேபோல் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளையர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பல்லாயிரக்கணக்கானோர் நேரில் கண்டுகளித்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த திமுக-வின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மீது பறையர் சமூக மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அமைச்சர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பாலமேடு கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமேட்டில் அனைத்து சமுதாய உறவின் முறைக்கு சொந்தமான கோயில்களில் காளைகளை மேற்படி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வது கிராம பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு தொடங்கிய பின் பாலமேடு கிராம கமிட்டி சார்பாக ஏழு கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் பல வருடங்களாக பாலமேடு பறையர் சமூகத்தை சேர்ந்த பாறை கருப்பசாமி கோவில் காளையை சாதிய தீண்டாமை காரணமாக அவிழ்த்து விடப்படுவதில்லை. மஞ்சமலை ஆற்றில் நடைபெறும் பொதுவிழாவில் கலந்து கொள்ளவும், ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளவும் பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் தங்கள் பறையர் சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் தங்கள் பறையர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
ஜாதிய பாகுபாடு அதிகம் பார்க்கும் திராவிட மாடல், சமூகநீதி காக்கும் அரசு என சொல்லிக்கும் அமைச்சர் மூர்த்தி மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். வரும் தேர்தலில் இந்த அமைச்சர் தொடர்புடைய திமுக கட்சிக்கு வாக்கு அளிக்கப் போவதில்லை என தெரிவித்தனர். இன்றைய தினம் பாலமேடு கிராமமே திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி ஜல்லிக்கட்டு விழாவை புறக்கணித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... கைதான வடமாநில நபர் - சென்னையில் பரபரப்பு
மேலும் படிக்க | வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ