Maoist Leader Chalapathi Encounter Latest Updates: சத்தீஸ்கரில் நேற்று இரவில் மாவோயிஸ்ட் தலைவர் சலபதி மற்றும் அவரது 19 கூட்டாளிகள் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இடதுசாரி பயங்கரவாதிகள் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட வெற்றிகரமான ஆப்ரேஷன்களில் இது முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. குறிப்பாக, சலபதியின் தலைக்கு ரூ.1 கோடி சன்மானத்தையும் அரசு அறிவித்திருந்தது.
சலபதி என்கவுன்டர்: வீரர்களுக்கு அமித்ஷா பாராட்டு
அப்படியிருக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாவோயிஸ்ட் தலைவர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து அவரது X பக்கத்தில் கூறுகையில், "நக்சலைட்டுகளுக்கு மற்றொரு பெரிய அடி. நக்சலைட்டுகள் அற்ற இந்தியாவை உருவாக்குவதில் நமது பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நக்சலைட்டுகள் அற்ற இந்தியாவுக்கான நமது உறுதியாலும், நமது பாதுகாப்புப் படைகளின் கூட்டு முயற்சிகளாலும், நக்சலைட்டுகள் இன்று அவர்களது இறுதி மூச்சை சுவாசித்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு! சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை!
பெரிய வெற்றி என அமித்ஷா சொல்லும் அளவிற்கும், ரூ.1 கோடி வரை அரசு சன்மானம் அறிவிக்கும் அளவிற்கும் இந்த சலபதி என்ன பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்?, யார் இவர்? என்ற முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
யார் இந்த சலபதி?
இவரது இயற்பெயர் ஜெயராம் ரெட்டி என்றே கூறப்படுகிறது. இருப்பினும், ராமசந்திர ரெட்டி, அப்பாராவ், ராமு உள்ளிட்ட பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். ஆனால், பொதுவாக இவரை பலரும் சலபதி என்றே அழைக்கின்றனர். மூத்த மாவோயிஸ்ட் தலைவராக இவர் அறியப்பட்டு வந்தார்.
60 வயதான சலபதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியில் பிறந்தவர். 10ஆம் வகுப்பு வரை அங்குதான் பயின்றுள்ளார். சலபதி பெரியளவில் கல்வி கற்கவில்லை என்றாலும், அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கியத்துவம் பெற்றார்.
சலபதி ஏன் முக்கியத்துவம் பெற்றார்?
அமைப்புக்குள் உயர் முடிவுகளை எடுக்கும் மத்திய குழுவின் உறுப்பினர் (CCM) பிரிவில் ஒருவராக இருந்தார். தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இத்தகைய உயர் பதவியை வகித்ததன் காரணமாகவே அவரது தலைக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சன்மானம் அறிவிப்பின் மூலமே அவர் பாதுகாப்பு படையினருக்கு எவ்வளவு முக்கியமான இலக்கு என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
சத்தீஸ்கரின் பஸ்டர் நகரில் உள்ள அடர்ந்த மற்றும் ஊடுருவ முடியாத காட்டுப் பகுதிகள் அனைத்தும் சலபதிக்கு அத்துப்படி என்கின்றனர். எப்போதும் அவரை சுற்றி 8-10 வீரர்கள் பாதுகாப்புக்கு இருந்துகொண்டே இருப்பார்கள், இதன்மூலம் அமைப்புக்குள் அவரது முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க | அம்பானி வீட்டு திருமணத்தை மிஞ்சும் அதானி வீட்டு கல்யாணம்!! இத்தனை ஏற்பாடுகளா?
மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தலைவரான இவர்தான், பல்வேறு ஆப்ரேஷன்களுக்கு வியூகங்களை வகுத்து முன்நின்று செயல்படுத்துபவராகவும் இருந்துள்ளார். இவரது தலைமைத்துவம், வியூகம் அமைப்பதில் நிபுணத்துவம், சவாலான நிலப்பரப்புகளில் வளங்களை திரட்டும் திறன், ஆகியவற்றால் அந்தப் பகுதிகளில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
சலபதி என்கவுன்டர் நடந்தது எப்படி?
சத்தீஸ்கரின் அபுஜ்மத் பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பு படையினர் - மாவோயிஸ்ட்கள் மோதல்களை கருத்தில் கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு சலபதி தனது தளத்தை கரியாபந்த்-ஒடிசா எல்லைக்கு மாற்றி இருக்கிறார். அதாவது இந்த பகுதி பாதுகாப்பான செயல்பாட்டு மண்டலமாகும்.
மாவட்ட ரிசர்வ் காவலர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சத்தீஸ்கரைச் சேர்ந்த கோப்ரா கமாண்டோக்கள், ஒடிசாவைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக் குழுவுடன் மாவோயிஸ்ட் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையின் போது சலபதி மற்றும் அவரது 19 கூட்டாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 19 கூட்டாளிகள் யார் யார் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
ஒடிசா எல்லையில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள சத்தீஸ்கரின் குலாரிகாட் ரிசர்வ் காட்டில் சில மாவோயிஸ்ட் வீரர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றுள்ளனர். என்கவுன்டர் இடத்தில் பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ