தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழக அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% ஊக்கத் தொகை என 10% போனஸ் வழங்கப்படவுள்ளது. இந்த தொகை வரும் 30-ஆம் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
மாநில போக்கு வரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தேயிலை தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தினர் ஆகியோர் இந்த போனஸ் பெறத் தகுதியானவர்கள். இவர்களுக்கான போனஸ் குறித்த உத்தரவுகள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து தனித்தனியாக வெளியிடப்படும் என்று நிதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 1961-ஆம் ஆண்டு சட்டப்படி, போனஸ் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.7 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த உச்சவரம்பு தற்போது ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.