தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டார்!
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் மணிகண்டன். 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முதல்முறையாக தேர்தலில் நின்று வெற்றிபெற்ற இவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றி வந்த இவர், ஆரம்ப காலக்கட்டத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக கட்சியில் வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த போது சசிகாலாவுக்கு அளித்து வந்த ஆதரவை மாற்றிக்கொண்டு, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இதனிடையே மணிகண்டனுக்கும், கருணாஸுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. மேலும் கருணாஸை இவர் செயல்படவே விடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கருணாஸ் திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். மேலும் மணிகண்டன் சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் செயலாளராகவும் உள்ளார். இதனால் கருணாஸால் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தனக்கு உயிர் பயம் இருப்பதாக கூறி, தனது தொகுதிக்குள் கருணாஸ் செல்லவில்லை. இதை சட்டப்பேரவையிலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் கருணாஸ் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அந்த அளவுக்கு இரண்டு தரப்பினரிடையே பிரச்னை இருந்தது வந்தது.
இதேபோல் முதலில் சசிகலா ஆதரவாளராக இருந்த இவர், பிறகு டிடிவி. தினகரனுக்கும் எதிராக செயல்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் அரசு கேபிள் டிவிக்கான செட்டாப்பாக்ஸ் வழங்கப்பட்டது, இதில் சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் கேபிள் டிவி கார்பரேஷன் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
முன்பு அவர் இப்பதவியில் இருந்தபோது, அமைச்சராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சர் மணிகண்டன் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை சென்றது. இந்நிலையில் பரமக்குடியில் மணிகண்டன் நேற்று பேட்டி அளித்தார். கேபிள் டிவி கார்பரேஷன் தலைவராக இருக்கக்கூடிய உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு 2 லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன என்று பேட்டியின்போது மணிகண்டன் குறிப்பிட்டார். இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த விவகாரம் ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணிகண்டன் நேற்றிரவு அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என்றும் ஆளுநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி நீக்கத்திற்கு பிறகு மணிகண்டன் அதிமுகவிலேயே தொடர்வாரா அல்லது வேறு கட்சிக்கு மாறுவாரா என்பது விரைவில் தெரியவரும்.