TVK - AIADMK, Tamil Nadu Latest News Updates: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனின் 108வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji) கலந்துகொண்டு, எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதன் பின்னர் கே.டி. ராஜந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு இடைத்தேர்தல் நேர்மையான தேர்தலாக நடைபெறாது என்பதை கடந்த ஈரோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலமே அறிந்து கொண்டு தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. திமுக ஆட்சியில் இடைத்தேர்தல் என்பது அத்துமீறிய அதிகார வரம்பை மீறியதாக இருக்கும் என்பதால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
'கூட்டணி கட்சிகளும் திமுக ஆட்சியை எதிர்க்கிறார்கள்'
திமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல் என்பது தொடர்கதையான ஒன்றுதான். எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் (Alanganallur Jallikattu 2025) இன்பநிதிக்காக ஆட்சியர் நிற்க வைக்கப்பட்ட அதிகார அத்துமீறல் என்பது புதுமையானது கிடையாது. திமுகவை அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது மட்டுமின்றி திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்டோர் மத்தியிலும் திமுகவிற்கு எதிர்ப்பு உள்ளது.
ஒரு ரூபாய் பரிசு தொகை கூட கொடுக்காமல் மக்களை பொங்கல் கொண்டாட வைத்துள்ளது திமுக அரசு. நீட் விவகாரத்தில் மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதியை சொன்னோம் வென்றோம் என்பதாக திமுக ஆட்சி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து சரியான வியூகம் அமைத்து ராஜ தந்திரமான முடிவை எடுத்து அதிமுக வெற்றி பெறும்.
விஜய்யை பாராட்டித் தள்ளிய ராஜேந்திர பாலாஜி
நடிகர் விஜய் (Actor Vijay) அரசியலுக்கு வரும்போது இவரால் நிலைக்க முடியுமா என்ற ஐயப்பாடு இருந்தது உண்மைதான். ஆனால் இன்று அவரது நிதானமான நடவடிக்கையை பார்க்கும்போது அரசியல் தலைவர்கள் இயங்கும் அளவிற்கு பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார். விஜய் திமுக மீது வைத்துள்ள அதிருப்தி அதிமுகவிற்கு பலமாக உள்ளது. திமுகவின் ஆணவ அரசியலை அடக்க வேண்டும் என்ற பிரதான கொள்கையோடு விஜய் கட்சி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.
ராஜேந்திர பாலாஜி அன்று பேசியது...!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vetri Kazhagam) என்ற கட்சியை தொடங்கியதில் இருந்து அதிமுகவை சேர்ந்த பல மூத்த தலைவர்களே அவரை கடுமையாக விமர்சித்து வந்தது அனைவரும் அறிந்ததும். அவ்வளவு ஏன், விஜய் பக்குவமான அரசியலை முன்னெடுக்கிறார் என தற்போது பாராட்டும் ராஜேந்திர பாலாஜி கூட கடந்தாண்டு அக்டோபரில் விஜய் குறித்து பின்வருமாறு பேசியிருந்தார்:
"இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்ஜிஆர் நான் தான் என பேசுகிகன்றனர். மேலும், நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஒருக்காலமும் அது நடக்கவே நடக்காது. இது திராவிட பூமி, இங்கு நீதி கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் எப்போதும். இதுதான் தமிழகத்தின் சூழல். புதிதாக கட்சி தொடங்கியவர்களால் அரசியலில் வரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியாது, பிரச்சனைகளை சமாளிக்க முடியாது, அவர்களால் வெள்ளி விழா கூட கொண்டாட முடியாது. வெறும் 30 நாட்களுக்குள் ஓடி விடுவார்கள்" என பேசியிருந்தார்.
2026 தேர்தல் - கூட்டணி கணக்குகள் தொடங்கிவிட்டதா?
இந்த வார்த்தைகளை உதிர்த்த ராஜேந்திர பாலாஜி மூன்றே மாதங்களில் விஜய்யை பாராட்டித் தள்ளியுள்ளார். காரணம், திமுகவை தவிர பிற எதிர்க்கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக (AIADMK) தலைமை மூத்த தலைவருக்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் பரவியிருந்தன. 2026ஆம் ஆண்டில் வலுவான கூட்டணி அமைக்க இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என அதிமுக திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். விஜய் தரப்பிலும் கூட மாநில அரசு (திமுக), ஒன்றிய அரசு (பாஜக) ஆகியவை மீது கடுமையான எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டாலும், அதிமுக மீது பெரிதாக விமர்சனங்கள் என ஏதும் முன்வைக்கப்படவில்லை எனலாம்.
அதுமட்டுமின்றி, 2026இல் கூட்டணிக்கு வருபவர்களுக்கு, ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசியிருந்தார். அப்படியிருக்க, அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றாலும், தவெக அமைக்கும் கூட்டணியில் அதிமுக சென்றாலும் ஆட்சியை கைப்பற்றினால் கூட்டணி ஆட்சியே அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அப்படியிருக்க, அதிமுக - தவெக கூட்டணி கணக்குகள் தற்போதே தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தை, ராஜேந்திர பாலாஜியின் இன்றைய பேச்சு எழுப்பியிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ