செங்குன்றத்தை சேர்ந்த ரவுடி முத்து சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, கொலை உள்ளிட்டவற்றில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்ளன. சென்னையில் வழக்கறிஞர் ராஜேஷை கொலை செய்ததும் இந்த ரவுடி முத்து சரவணன் கும்பல் தான். இந்த கொலை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்து சரவணன் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த சூழலில் அவர் சென்னை சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அவருடன் இருந்த மற்றொரு ரவுடியான சதீஷ் மீதும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்துள்ளார். ரவுடி முத்து சரவணன் தாக்கியதில் 3 போலீசார் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆவடி மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களில் 5 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை - ஊரப்பாக்கம் அருகே ரவுடிகளான சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய ரவுடிகளை போலீஸார் என்கவுன்டர் செய்திருந்தனர். இவர்கள் இருவர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல ரவுடி குள்ள விஷ்வாவும் என்கவுண்டர் செய்யப்பட்டார். விஷ்வா மீது ஆள் கடத்தல், கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த இவரை பிடிக்க சென்ற போது போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். அப்போது தற்காப்புக்காக எஸ்.ஐ முரளி சுட்டதில் குள்ள விஷ்வா சம்பவ இடத்துலேயே உயிரிழந்தார்.
தற்போது சோழவரம் அருகே ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் நேற்று இரவு செங்கல்பட்டு அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தணிகா என்கிற தணிகாசலம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா போலீசார் பிடியில் தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காரில் இருந்து தப்பியோட முயற்சி செய்த போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தணிகாவின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தணிகாவை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | நாய்க்காக ரூ.25,000 செலவழித்து சைக்கிள் வாங்கிய எஜமான்! வைரலாகும் புகைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ