IPL 2023: கோடிகள் கொடுத்தும் பயனில்லை... ஏலத்தில் எடுத்த இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் அணிகள்!

IPL 2023: நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த மினி ஏலத்தில் அதிக எதிர்பார்ப்புகளுடன் பல கோடி ரூபாய் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்களில் சிலர், தொடரில் சொதப்பியிருந்தனர். அவர்கள் குறித்து இதில் காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : May 22, 2023, 03:42 PM IST
  • ஐபிஎல் தொடர் வரும் மே 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்.
  • நாளை முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.
IPL 2023: கோடிகள் கொடுத்தும் பயனில்லை... ஏலத்தில் எடுத்த இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் அணிகள்! title=

IPL 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய லீக் சுற்றில், 70 போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

பிளேஆப் ரேஸ்

நாளை முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், வரும் ஞாயிற்றுகிழமை அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியுடன் இந்த தொடர் முடிவடைய இருக்கிறது. நடப்பு சாம்பியனான குஜராத் அணி கோப்பை தக்கவைக்கவும், மும்பை அணி 6ஆவது முறையாக கோப்பையை வெல்லவும் முனைப்புடன் உள்ளனர். 

லக்னோ அணி அறிமுகமான கடந்த வருடமே பிளேஆப் வரை வந்திருந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக பிளேஆப் சுற்றில் கால்பதித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5ஆவது கோப்பைக்காவும், தோனிக்கு சிறப்பான தொடராக இதை அமைத்துக்கொடுக்கவும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | இனி பும்ரா தேவையில்லை! இந்திய அணிக்கு கிடைத்த புதிய யார்க்கர் ஸ்பெசலிஸ்ட்!

ஏலமும், எதிர்பார்ப்பும்

பிளேஆப் பரபரப்புக்கு மத்தியில் இன்றைய தினம் ஓய்வு நாளாகும்.  இந்த சூழலில், நடைபெற்று முடிந்த லீக் சுற்று போட்டிகளில், தொடரின் தொடக்கத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் பலரும் சோபிக்கவில்லை எனலாம். மினி ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அணியின் வெற்றிக்கு பெருமளவில் பங்களிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கும்.  இந்நிலையில், ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, தொடரில் சொதப்பிய வீரர்கள் குறித்து இங்கு காணலாம். 

1. ஹாரி புரூக் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 13.25 கோடி)

இங்கிலாந்தின் அதிரடி வீரர் என சமீப காலங்களில் பெயர் பெற்ற ஹாரி புரூக்கின் பேட்டிங் திறனை கண்டு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் புரூக்கிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 55 பந்துகளில் அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆனால் அந்த ஆட்டத்திற்கு பிறகு அவர் சரியாக சோபிக்கவில்லை, சொல்லப்போனால் கேகேஆர் உடனான போட்டிக்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடவில்லை.

அணி நிர்வாகம் அவரை பேட்டிங் வரிசையில் வெவ்வேறு இடங்களில் களமிறக்கியது. ஆனால், அவரால் சரியாக திறனை வெளிக்காட்ட இயலவில்லை. இதனால் அவர் சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்கப்பட்டார். ஹாரி புரூக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக 11 போட்டிகளில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 21.11 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 123.37. அடுத்த ஆண்டு SRH அவரைத் தக்க வைத்துக் கொள்வாரா இல்லையா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 

2. மயங்க் அகர்வால் - (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 8.25 கோடி )

கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை இழந்த மயங்க், ஐபிஎல் தொடரில் மீண்டும் தன்னை நிரூபிக்க மற்றொரு சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் பேட்டிங்கில் தனது ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டின் மூலம் ஹைதராபாத் நிர்வாகம் உட்பட அனைவரையும் ஏமாற்றினார். ஹாரி புரூக்கைப் போலவே, மயங்கும் வெவ்வேறு பேட்டிங் ஆர்டர்களில் முயற்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அனைத்து ஆட்டங்களிலும் சோபிக்கவில்லை. அகர்வால் 10 போட்டிகளில் 270 ரன்களை சராசரியாக 27.00 மற்றும் 128.57 ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்தார். இவரையும் அடுத்த ஆண்டு அந்த அணிக்கு விடுவிக்கும் என எதிர்பார்க்கிறது.

3. சாம் கர்ரன் - (பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 18.50 கோடி )

மினி ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சாம் கரன் ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றார். 2022 டி20 உலகக் கோப்பையில் அவரின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. உலக்கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த சாதனைகளுக்குப் பிறகு, ஐபிஎல் மினி ஏலத்தில் அவரின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதனால்தான் கரன் மீது பஞ்சாப் அதிக நம்பிக்கை வைத்திருந்தது. 

சாம் கரன், இந்த சீசனின் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்டார். வழக்கமான கேப்டன் ஷிகர் தவான் இல்லாத நேரத்திலும் அவர் அணியை வழிநடத்தி முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்தார். இருப்பினும், இரண்டாவது பாதியில் அவரது செயல்திறன், குறிப்பாக பந்துவீச்சும் பெரிதாக பலனளிக்கவில்லை. ஐபிஎல் 2023இன் 14 போட்டிகளில், கரன் சராசரியாக 27.60 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 135.96-இல் 276 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் அவரால் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

4. பென் ஸ்டோக்ஸ் - (சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 16.25 கோடி)

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத மற்றொரு பெரிய வீர்ர இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ். காயமடைவதற்கு முன்பு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்று பலரும் விவாதிக்கலாம். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார் மற்றும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். போட்டியின் பிற்பகுதியில் அவர் உடற்தகுதி பெற்றாலும், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை. கடந்த சனிக்கிழமை நடைபெர்ற சிஎஸ்கேவின் கடைசி லீக் ஆட்டத்திற்குப் பிறகு அவர் அயர்லாந்திற்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணைவார். மேலும் அவர் பிளேஆஃப் சுற்றின்போது அணியுடன் இருக்க மாட்டார்.

மேலும் படிக்க | ஆர்சிபியின் கனவை சிதைத்த சுப்மன் கில்... பிளேஆப் சென்றது மும்பை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News