Lesbian ஆக நடித்திருக்கும் லிஜோ மோல்! காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம்!

Kadhal Enbadhu Podhu Udamai Movie Review : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித்,ரோகிணி, கலேஷ் நடித்துள்ள காதல் என்பது பொதுவுடமை படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Edited by - Yuvashree | Last Updated : Feb 13, 2025, 01:09 PM IST
  • லிஜோமோல் நடிக்கும் புதிய படம்.
  • ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
  • இந்த வாரம் படம் வெளியாகிறது
Lesbian ஆக நடித்திருக்கும் லிஜோ மோல்! காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம்! title=

Kadhal Enbadhu Podhu Udamai Movie Review : சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை லிஜோமோல். தொடந்து நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் காதல் என்பது பொதுவுடமை. லெஸ்பியன் பற்றி ஆழமாக பேசி உள்ள இந்த படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா, அனுஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளை டேனி சார்லஸ் மேற்கொண்டுள்ளார். Jeo baby, Mankind cinemas, Symmetry cinemas, Niths production ஆகியோர் இணைந்து தயாரிக்க BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி படம் வெளியாகிறது.

படத்தின் கதை:

படத்தின் தொடக்கத்தில் லிஜோமோல் தனது அம்மா ரோகினியிடம் தான் ஒருவரை காதலிப்பதாக மிகவும் தயக்கத்துடன் சொல்கிறார். சிங்கிள் மதராக தனது பெண்ணை வளர்த்து வரும் ரோகினி மகிழ்ச்சி அடைந்து நான் உடனே உனது காதலனை பார்க்க வேண்டும்,  வீட்டிற்கு கூட்டிட்டு வா என்று சொல்கிறார். ஆனால் தனது காதலரை லிஜோமோல் வீட்டிற்கு கூட்டி வந்ததும் ரோகிணிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. காரணம் ஒரு பெண்ணை தனது காதலராக அறிமுகப்படுத்துகிறார் லிஜோமோல். மேலும் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் தெரிவிக்கிறார். இதன் பின்பு என்ன ஆனது? இவர்களது காதலை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா? என்பது தான் காதல் என்பது பொதுவுடமை படத்தின் கதை. 

ஓரினச்சேர்க்கை பற்றி பேசி உள்ள திரைப்படம் 

சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஓரினச்சேர்க்கை பற்றி பல படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் காதல் என்பது பொதுவுடமை பலமும் சேர்ந்துள்ளது. இரு பெண்களுக்கு இடையே உள்ள காதலை மிக அழகாக இந்த படத்தில் பேசி உள்ளனர். இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் சிம்பிளாக அதேசமயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை பற்றி அழகான ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஆண் பெண் காதலை பற்றி பல படங்கள் பேசியிருந்தாலும் இரு பெண்களுக்கு இடையே உள்ள காதலை இந்த படம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. 

படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள் தான், மொத்த கதையும் ஒரே வீட்டிற்குள் தான் நடக்கிறது. ஆனாலும் இரண்டு மணி நேரம் படம் போர் அடிக்காமல் நகர்கிறது. இதற்கு முக்கிய காரணம் அனைவரது நடிப்பும் தான். படத்தில் உள்ள நான்கு பெண் கதாபாத்திரங்களும், இரண்டு ஆண் கதாபாத்திரங்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரோகிணி மற்றும் லிஜோமோல் மிகவும் எதார்த்தமாகவும், அதே சமயம் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை புரிந்தும் நடித்துள்ளனர். மேலும் வினித், கலேஷ், தீபா, அனுஷா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தீபாவின் ஒன்லைன் கவுண்டர்கள் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வினித் ஏன் இவ்வளவு காலமாக படங்களில் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய கதாபாத்திரங்கள் அமையும். லெஸ்பியன் பற்றி சமூகத்தில் என்ன மாதிரியான பார்வை இருக்கிறது,  அதுவே நம் வீட்டில் நடந்தால் அதனை எப்படி அந்த குடும்பம் ஏற்றுக் கொள்கிறது என்பதை சிறப்பான வசனங்கள் மூலமும், காட்சிகள் மூலமும் இந்த படம் பேசுகிறது. 

மனதை ஈர்த்த க்ளைமேக்ஸ்:

குறிப்பாக கிளைமாக்ஸ் இல் மொட்டை மாடியில் அனைவரும் அமர்ந்து பேசும் ஒவ்வொரு வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. முன்னணி நடிகையான லிஜோமோல் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு தனி பாராட்டுக்கள். நடிகர்களை தாண்டி ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒரு வீட்டிற்குள் நடக்கும் கதையை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். பெரிதாக ட்விஸ்ட் மற்றும் பரபரப்பான திரைக்கதை இல்லாததால் ஒரு சிலருக்கு இந்த படம் போர் அடிக்கலாம். பெண்ணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள காதல், ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உள்ள காதல், திருமணமான தம்பதிகளுக்கு இடையே உள்ள காதல், ஒரு தலை காதல் என அனைத்தை பற்றியும் காதல் என்பது பொதுவுடமை படம் பேசுகிறது.

மேலும் படிக்க | ரச்சிதா மஹாலக்ஷ்மியின் ஃபயர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

மேலும் படிக்க | வித்தியாசமான திரில்லர்! தருணம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News