திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆடு, கோழி பலியிடுவதற்கு திடீர் தடையின் பின்னணி என்ன? சீமான் கேள்வி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆடு, கோழி பலியிடுவதற்கு திடீர் தடையின் பின்னணி என்ன? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.  

Written by - R Balaji | Last Updated : Feb 11, 2025, 06:13 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆடு, கோழி பலியிடுவதற்கு திடீர் தடையின் பின்னணி என்ன? சீமான் கேள்வி!  title=

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? என நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

திமுக அரசு துணைபோனதேன்? 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் திமுக அரசு துணைபோனதேன்?

சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்? 

கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பாஜகவின் கொடிகளுடன் கோயிலுக்குள் பாஜகவினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை?

மேலும் படிங்க: மகளிர் உரிமை தொகை... அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு! தொகை அதிகரிக்குமா?

மதுரையை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்ற முயற்சி

கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பாஜகவின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?

இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென திமுக அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு,கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், “ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்” என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். ‘சிவன் மலை’ என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். திமுக அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா?
  
திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்? 

திடீரென தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா?

1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென திமுக அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா?

தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் திமுக அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட முதல்வர் ஐயா ஸ்டாலின் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா? 

சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய திமுக அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா? என கூறியுள்ளார். 

மேலும் படிங்க: 3 மணி நேரம் நடந்த சந்திப்பு! விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன அட்வைஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News