உ.பி., மாநிலத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து கான்பூரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நரேந்தர மோடி பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
அவர் பேசுகையில், உ.பி., மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக கடந்த சில நாட்களாக நான் கண்கூடாக பார்க்கிறேன். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இளைஞர்களால் தான் வறுமையை ஒழித்து, வரலாற்றை உருவாக்க முடியும். நான் கறுப்பு பணத்தை தடுக்க நினைக்கிறேன். ஆனால் கறுப்பு பண விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை நாம் குற்றம்சாட்டி விடுவோமோ என்ற பயத்தால் அவர்கள் பார்லிமென்ட் கூட்டத் தொடரை முடக்கி உள்ளனர்.
பதவியேற்ற முதல் நாளில் இருந்தே எங்கள் அரசு மக்கள் நலனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. ஊழல் செய்தவர்கள் மட்டும் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதை முதல் முறையாக பார்க்கிறோம். ஊழலை அரசு நிச்சயம் வேரறுக்கும். தேர்தலில் விளையாடும் கறுப்பு பணத்தை தடுக்க தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கையை பா.ஜ., வரவேற்கிறது. ஊழலும், கறுப்பு பணமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
மத்திய அரசு ஏழைகள், நடுத்தர மக்கள், தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்க முன்வந்திருக்கிறது. ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், நடுத்தர வகுப்பு மக்கள் சுரண்டப்படுதில் இருந்து காப்பது, தொழில் செய்பவர்கள் எதிர் கொள்ளும் துன்புறுத்தல் களைக் குறைப்பது ஆகிய மூன்றுக்கும் முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு செயல்படும் என்றார்.