புதுடெல்லி: கொலிஜியம் பரிந்துரைத்த 43 நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்ய முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியம் முறையில் நிலவிய குழப்பங்களுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் பணியில் கொலீஜியம் குழு இறங்கியது.
கடந்த நவம்பர் 11-ம் தேதி, கொலிஜியம் பரிந்துரைத்த 77 நீதிபதிகளில் 34 நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 43 பெயர்களை மறுபரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்குர் தலைமையிலான கொலீஜியம் குழு மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மத்திய அரசு கொலிஜியம் பரிந்துரைத்த 43 நீதிபதிகளையும் நியமிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.