டெல்லி தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷை தாக்கியதாகக் கூறி தொடர்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்களுக்கு ஜாமின் வழங்கி டெல்லி பாட்டியலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டில் டெல்லியின் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இந்த ஆலோசனையின் போது ஆம்ஆத்மி எம்எல்ஏக்களால் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அன்சு பிரகாஷ் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தன்னைத் தாக்கியதாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அமனதுல்லா கான்,பிரகாஷ் ஜர்வால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமனதுல்லா கான், பிரகாஷ் ஜர்வால், நிதின் தியாகி, ரிதுராஜ் கோவிந்த், சஞ்சீவ் ஜா, அஜய் தத், ராஜேஷ் ரிஷி, ராஜேஷ் குப்தா, மதன் லால், பிரவீண் குமார், தினேஷ் மோங்கியா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக முதல்வர் கேஜ்ரிவாலிடம் கடந்த மே மாதம் 18-ம் தேதி 3 மணிநேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் நாள் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். காவல்துறையினர் தாக்கல் செய்த இந்த 1,300 பக்க குற்றப்பத்திரிகையில், தலைமைச் செயலாளரை முதல்வர் கேஜ்ரிவால், சிசோடியா ஆகியோர் உள்நோக்கத்துடன் மிரட்டியுள்ளனர், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். எனினும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் அக்டோபர் 25(இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி, பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்களுக்கு ஜாமின் வழங்கி டெல்லி பாட்டியலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!