உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிக்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் (Coronavirus) சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன. சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு (Central Government) இலவசமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை கட்டாயமாக்கியது. இதன்படி தமிழ் நாட்டிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ் நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரிவித்த மாநில அரசு, படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்திட வேண்டும் என்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை படிப்படியாகத் திறந்து வருகிறது.
இச்சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆனதாலும், முழு யாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவ மழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே, செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த செமஸ்டருக்கான சிலபஸ் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத் திட்டம் (சிலபஸ்) கல்லூரி பேராசிரியர்களுக்குக் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை முழுமையாக எங்களுக்கு ஆசிரியர்கள் நடத்தவில்லை என்றும், மேலும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்ததாக இன்றைய நாளிதழ்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
கல்லூரிகளில் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், பல மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
ALSO READ: மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்
கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டி, இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து, வகுப்பை புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். எனவே, அனைத்து கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால் தான் மாணவச் செல்வங்கள் முழு திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும்.
இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, போதிய நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், இந்த செமஸ்டருக்குண்டான பாடத் திட்டம் (சிலபஸ்) இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும், இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லை என்பதையும், மாதிரித் தேர்வுகள் நடைபெறாததையும், அனைத்து மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா? என்பதை உறுதி செய்ய இயலாத நிலையையும் கருத்திற்கொண்டு, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR