ராயபுரம்: தேமுதிக கட்சிக்குள் எவ்வித குழப்பங்களும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்!
தேமுதிக வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார்.
விழாவில் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கிய விஜயபிரபாகரன், பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவி வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடன் பேசிய அவர்...
"பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்தும், வியூகம் குறித்தும் அறிவிக்கப்படும்.
தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிட தயார். தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த பயமும் எனக்கு இல்லை" என தெரிவித்தார்.
கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., ஊடகங்களின் யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது, எங்கள் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை. கட்சியின் நிர்வாகிகள் பலர் இங்கு கூடியுள்ளனர், சந்தேகமிருந்தால் கேளுங்கள் என தெரிவித்தார்.
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்க சென்றுள்ள நிலையில், கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் விஜயபிரபாகரன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்ககது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் உடன் மாவட்ட செயலாளர் மதிவாணன், முன்னாள் MLA நல்ல தம்பி, பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.