தமிழக அரசின் அராஜக போக்கிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்த மு.க. ஸ்டாலின்.
அதைக்குறித்து அவர் சட்டப்பேரவையில் பேசியதாவது:-
இன்று (09-07-2018) சட்டப்பேரவையில், சேலம் எட்டு வழிச்சாலை பிரச்சினையில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பொதுமக்களையும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை எல்லாம் கைது செய்து அவர்களுடைய பேச்சுரிமையையும், எழுத்துரிமையையும் நசுக்கும் ஆளும் அரசின் அராஜக போக்கிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், சர்வாதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று மனப்பால் குடித்த அரசுகள், மண்ணில் வீழ்ந்திருக்கக்கூடிய வரலாற்றை தான் பெற்றிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தினுடைய தனி சிறப்பே சுதந்திரமான பேச்சுரிமையும், எழுத்துரிமையும் தான் என்பதை இந்த அரசு உணர வேண்டும். கைது செய்வதாலும், அடக்குமுறையாலும் எதையும் சாதித்து விட முடியாது. எனவே இந்தப் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.