நெல்லை மாவட்டம் பேட்டை ரயில்வே நிலையத்தைச் சுற்றிலும் வறண்ட நிலங்கள் உள்ளன. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு பரபரவென இருந்த இந்த ரயில் நிலையம், தற்போது ஆளரவற்றுக் கிடக்கிறது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பேட்டை ரயில் நிலையத்தில் சில ரயில்கள் மட்டும் நின்றுசெல்கிறது. நள்ளிரவு நேரத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துசெல்கிறது. காலை 7.10 மணிக்கு நெல்லை சந்திப்பிலிருந்து செங்கோட்டைக்கும், இரவு 7.10 மணிக்கு அங்கிருந்து நெல்லை சந்திப்பிற்க்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது. குறைந்த அளவே இந்தப் பகுதிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், அதனை நம்பித்தான் பள்ளி,கல்லூரி மற்றும் பிற பணிகளுக்காக செல்லும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் ரயில் வரும் நேரங்களில் மட்டுமே ஏறி, இறங்குவதுண்டு. பிற நேரங்களில் பேட்டை ரயில்நிலையம் ஆளரவற்றுக் காணப்படுவதால் சமூக விரோத கும்பலுக்கு வாட்டமாக போய்விட்டது.
மேலும் படிக்க | வானதி ஸ்ரீனிவாசனுக்கு கோவை எம்.பியின் 5 கேள்விகள்.!
ரயில்வே நிலையத்தைச் சுற்றி முட்புதர்களும், மரங்களும் மண்டியிட்டுள்ளதால் இரவு நேரத்தில் இந்த ரயில் நிலையம் வெறிச்சோடி காட்சியளிக்கும். ஒருசில விளக்குகளையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளதால் இரவு நேரத்தில் பெரும்பாலான இடங்களில் வெளிச்சம்கூட இருக்காது என்றும், இதனால் ரயில்நிலையத்தில் நிற்கவே அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ரயில்வே திண்ணைகளில் அமர்ந்து மதுபானம் அருந்துவதாகவும், அந்த பாட்டில்களையும், இதர குப்பைகளையும் அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். போதையில் மதுபாட்டில்களை நடைமேடையிலேயே மர்ம நபர்கள் உடைத்துவிடுவதால், பாட்டில்களின் துகள்கள் நடைமேடையிலேயே சிதறிக்கிடக்கின்றன. காலையில் அவசரம், அவசரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் பாதங்களில் இந்த பாட்டில் துண்டுகள் கிழித்து காயத்தை ஏற்படுத்துவதாகவும் பயணிகள் வேதனையாக குறிப்பிட்டுள்ளனர். இதுபோதாதென்று, திருட்டுச்சம்பவங்களும் இந்த ரயில்நிலையத்தில் அரங்கேறி வருகின்றன. அலுவலக வாயில் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் அலுவலக வாயிற் கதவருகே ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் தரைப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். தரைதளத்தை உடைத்து சேதப்படுத்திச் சென்றது மட்டுமில்லாமல், அந்த இடம் முழுவதும் மதுபாட்டில்களை உடைத்துப் போட்டுள்ளனர். இதன்வழியாகத்தான் ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் உள்ளே செல்ல வேண்டி இருப்பதால் மிகுந்த இன்னலுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர். குற்றச்செயல்களை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த தடுப்பு கல்வேலிகளையும் மர்ம கும்பல் உடைத்துள்ளது. அதில் இருக்கும் ரயில்வே இரும்புக் கம்பிகளையும் மர்ம நபர்கள் விட்டுவைக்கவில்லை.
மேலும் படிக்க | தண்டவாளத்தை கடக்க முயலும் யானை கூட்டங்களின் திக் திக் நிமிடங்கள்!
நாளுக்குநாள் அதிகரிக்கும் மர்ம நபர்களின் அட்டகாசத்தால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், உடனடியாக ரயில்வே போலீஸார் இந்த குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம நபர்கள் மீது பேட்டை ரயில் நிலைய அலுவலர்களும், ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளனர். பேட்டை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் மாறும் என அந்தப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR