Republic Day 2025: மேடை பேச்சில் நாட்டம் உள்ளவரா நீங்கள்? நாட்டுப்பற்று மிக்கவரா நீங்கள்? அப்படியென்றால், நாளை குடியரசு தினத்தன்று உங்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாதீர்கள். உங்கள் குடியரசு தின உரைக்கு உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.
நம் நாட்டில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. இவற்றில் பல விழாக்கள், மதம் சார்ந்த, சமூகம் சார்ந்த, அமைப்பு சார்ந்த விழாக்களாக இருக்கின்றன. ஆனால், சில மட்டுமே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி ஒற்றுமையாய் கொண்டாடும் விழாக்களாக உள்ளன. அப்படி மக்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றாக கொண்டாடும் விழாக்களில் குடியரசு தின விழாவும் ஒன்று.
குடியரசு தினத்தன்று பொதுவாக விடுமுறை நாளாக இருந்தாலும், சில கல்வி நிறுவனங்கள், அலுவகங்கள், குடியிருப்பு அசோசியேஷன்கள் ஆகியவை குடியரசு தினத்தன்றோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இந்த விழாவை கொண்டாடுகிறார்கள். இதில் நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் ஆடல், பாடல், சிறு நாடகங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளும், பேச்சாளர்களின் உரைகளும், வினாடி வினாக்களும், ரங்கோலி போட்டிகளும், விளையாட்டு போட்டிகளும் நடப்பது வழக்கம்.
இப்படிப்பட்ட விழாக்களில் பேச பலருக்கு விருப்பம் இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தயக்கத்தால், இவர்கள் விரும்புவதை செய்யாமல் பின்வாங்குவது உண்டு. குடியரசு தின விழாவில் பேச விரும்பும் நபர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில பத்திகளை வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் நீங்கள் உங்கள் உரையை அமைக்கலாம்.
உரையின் துவக்கத்திற்கான யோசனைகள்
உரையின் துவக்கம் 1: குட்ட குட்ட குனியாமல் தட்டிவிட்டு தலை நிமிர்ந்து, ஏவியவனை எதிர்த்து நின்று, சளைக்காமல் சண்டையிட்டு, நாட்டுக்காக வீட்டை விட்டு, உயிர் கொடுத்து உரிமை பெற்ற பெருமை மிக்க இந்திய நாட்டு மக்களான நாம் இன்று நமது 76 வது குடியரசு தின விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். சுதந்திரம் கிரீடம் என்றால், குடியரசு என்ற நிலை அதில் பதித்த கல் போன்றது. 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற கையோடு, 1950 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சொந்த அரசியலமைப்பையும் உருவாக்கி, 1950 ஜனவரி 26 அன்று நம் தலைவர்கள் அதை அமல்படுத்தினார்கள். அரசியலமைப்பு நாட்டிற்கு ஒரு புதிய திசையை அளித்தது. அந்த திசையில் நாம் இன்றும் வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறோம்.
உரையின் துவக்கம் 2: என் இனிய நாட்டு மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்த கூட்டம், இந்த விழா, இந்த மகிழ்ச்சி, இவை அனைத்தும் நாம் பெருமைபட்டு பாராட்ட வேண்டிய விஷயங்கள். பூரிப்போடு மகிழ வேண்டிய தருணங்கள். அடிமைகளாக இருந்த நாம், உலக நாடுகளின் ஆசானாக இன்று அதி வேக வளர்ச்சி அடைந்துள்ளோம் என்றால், அதற்கு நமது அரசியலமைப்பு ஆணி வேராக இருந்ததுள்ளது என்று கூறினால், அது மிகையாகாது. சுதந்திரம் பெற்ற கையோடு நாட்டு மக்கள், குழப்பத்தில், தெளிவின்மையில், வழிகாட்டுதல் இல்லாமல் சிதறிவிடாமல், மீண்டும் ஒரு அன்னிய சக்தி நாட்டை அண்டிவிடாமல் நம்மை காத்து, நாட்டை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்த பெருமை நமது அரசியலமைப்புக்கே போய் சேரும். டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது அரசியலமைப்பின் வரைவை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது. பின்னர் இது நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.
உரையின் துவக்கம் 3: குடியரசு தின சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருக்கும் நாட்டுப்பற்று மிக்க நல்லுங்களுக்கு என் முதற்கண் வணக்கம். இன்று ஜனவரி 26, குடியரசு தின விழா என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால்தான் இந்த நாள் நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமானது. 1947 ஆகஸ்ட் 15 அன்று, நம் நாடு ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. ஆனால் அந்த நேரத்தில் நமது நாட்டிற்கு அதன் சொந்த அரசியலமைப்பு இல்லை. 1950 ஜனவரி 26 அன்று அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு நாட்டிற்கு ஒரு புதிய திசையை அளித்தது. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது அரசியலமைப்பின் வரைவை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது. பின்னர் இது நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.
உரையின் துவக்கம் 4: இந்த இனிய நாளில் நாம் அனைவரும் ஜனவரி 26, அதாவது குடியரசு தினத்தைக் கொண்டாட இங்கு கூடியுள்ளோம். முதலில், இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்களை கூறிக்கொளிறேன். உங்களுக்கு என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் வரலாறு பெருமைமிக்கது. அதில் எத்தனை தியாகங்களும் வீர சாகங்களும் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாடுபட்டு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
உரையின் துவக்கம் 5: இங்கு கூடியுள்ள அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இன்று நாம் அனைவரும் இந்த விழாவை பெருமையுடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இந்த தருணத்தில் இதன் வரலாற்றையும் சற்று திரும்பிப்பார்ப்பது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு நம் நாட்டில் எந்த அரசியலமைப்பும் இல்லை. நமது நாடு 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது, ஆனால் அந்த நேரத்தில் ஒரு அரசியலமைப்பு இல்லாததால் நாட்டில் முழுமையான ஒரு உணர்வு இல்லாமல் இருந்தது. அதை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நிறைவு செய்தார். அவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது, இது அரசியலமைப்பு வரைவை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது. பின்னர் அது நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
உங்கள் உரையை முடிக்கும் போது நாட்டில் நமக்குள்ள உரிமையையும், நாட்டின் மீது நமக்குள்ள கடமையையும் மீண்டும் ஒரு முறை அவையோருக்கு நினைவுபடுத்திச் செல்லுங்கள்.
உரையின் நிறைவு:
இன்று நாம் சுதந்திரமாய் வாழ்கிறோம். ஆனால், இந்த நிலை அத்தனை எளிதாக வந்துவிடவில்லை. முதலில் அடிமைத்தனமே வழக்கமாகிவிடுமோ என்ற அபாயகரமான நிலை இருந்தது. ஆனால், சிறிது சிறிதாக மக்கள் மனதில் விடுதலைக்கான வேட்கை தொடங்கியது. அஞ்சி வாழ இனி அவசியம் இல்லை என்பதை புரிந்துகொண்ட மக்கள், குரல் எழுப்பி உரிமை முழக்கம் செய்யத் தொடங்கினர்.
நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் செய்வதை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குட்ட குட்ட எழுந்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் ஆயுத பலமும், ஆள் பலமும் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களிடம் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணமும் நாட்டுப்பற்றும் மட்டுமே இருந்தன. இவற்றையே தங்கள் உந்துசக்தியாக்கி உத்வேகத்துடன் போராடினர்.
உதவி கேட்டு எந்திய கைகள் உரிமை கேட்கத் தொடங்கின. ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கம் புரிந்தது. ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின. இறுதியாக, பலரது தியாகத்தின் விளைவாக இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர போராட்ட வரலாற்றை இன்று கதையாய் படிக்கிறோம். படிக்கும்போதே நம் மனம் பதபதைக்கிறது. ஆனால், நம் நாட்டவர் இதை வாழ்க்கையாய் வாழ்ந்துள்ளார்கள்.
அதை சற்று எண்ணிப்பார்த்தால், அப்படி போராடி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பது புரியும். பல அறிஞர்கள், சிறந்த சிந்தனையாளர்கள் சேர்ந்து வடிவமைத்த அரசியலமைப்பை மதித்து அதன் வழி நடப்பதும், அது மீறப்படும்போது அதற்காக குரல் கொடுப்பதும், நம் தலையாய கடமையாகும்.
இந்த யோசனைகளுடன் உங்கள் எண்ணங்களையும் சேர்ந்து சிறந்த உரையை தயார் செய்து, மேடையில் நாட்டுப்பற்று மிக்க சொற்பொழிவை அழகிய தமிழில் வழங்க வாழ்த்துக்கள்!!
மேலும் படிக்க | குடியரசு தினம் கொண்டாட முக்கிய காரணம் ‘இவர்’ ஒருவர்தான்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ