போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை

"ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டது  தொடர்பாக அமித்சாவிடம் நேரடியாக முறையிட உள்ளோம் : அமித்சாவுக்கு நான் அனுப்பிய கடிதம் குறித்து உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்" - அண்ணாமலை பேட்டி

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2022, 03:35 PM IST
  • தமிழக பாஜகவின் அரசியல் சரித்திரத்தையே இந்த நூல் மாற்றி அமைக்க உள்ளது.
  • பாஜகவினர் எப்போதும் இந்த நூலை உடன் வைத்திருக்க வேண்டும்.
  • தமிழக பாஜகவினர் அலுவல் குறிப்புகளில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்ப் பெயரை பயன்படுத்த உள்ளோம்.
போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை title=

"பாரதப் பிரதமரின் மக்கள் நலத்  திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற நூல் வெளியீட்டு விழாவில் நிர்வாகிகள் மத்தியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். 

அவர் கூறியதாவது: 
 
"தமிழக பாஜக இன்று முதல் மத்திய அரசின் திட்டங்களுக்கு  தமிழில் பெயரிட்டே அலுவல் குறிப்புகள் , விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டும் "  என நிர்வாகிகள் இடையே அண்ணாமலை பேசினார்.

அனைத்து மத்திய அரசு திட்டங்களுக்கும் தமிழக பாஜக இனி தமிழ்ப் பெயர் சூட்டி, தமிழ்ப் பெயரையே பயன்படுத்துவோம். ஆங்கிலம் உட்பட எந்த மொழியில் இருந்தாலும் தமிழில் பெயர் சூட்டி அழைப்போம்.  இந்த புத்தகத்தில் கூட வேளாண் அபிவிருத்தி திட்டம் , செல்வ மகள் சேமிப்பு  , பெண் பிள்ளை பாதுகாப்போம் , ஊட்டச் சத்து திட்டம் , மண் வள திட்டம் என மத்திய அரசின் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இன்று முதல் தமிழக பாஜகவினர் அலுவல் குறிப்புகளில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்ப் பெயரை பயன்படுத்த உள்ளோம். பாஜகவினர் பலகைளில் தமிழிலேயே திட்டப் பெயர்களை விளம்பரப்படுத்த வேண்டும். 

சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை கொண்டுவந்தது மோடி அரசுதான். 6 சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை இனத்தை சேர்ந்த 10, 508 மாணவர்கள் மத்திய அரசின் ஊக்கத் தொகை பெற்று வெளிநாடுகளில் கல்வி பயின்றுள்ளனர்.  

மேலும் படிக்க | பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - பாக்யராஜ் பேசியது சரியா?

தமிழக பாஜகவின் அரசியல் சரித்திரத்தையே இந்த நூல் மாற்றி அமைக்க உள்ளது. பாஜகவினர் எப்போதும் இந்த நூலை உடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறினர் .

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசினார். அவர் கூறியதாவது;  

ஆளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக நான் வீடியோ ஒன்றை  டிவிட்டரில் பதிவிட்டுள்ளேன் , அதை பார்த்துவிட்டு ஆளுநர் காரில் தாக்குதல் நடத்தப்படவில்லை என முதல்வர் கூறட்டும். 

இந்தியாவில் போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்திலேயே இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். ஆளுநரை கொலைகாரர் என குறிப்பிட்ட வாசகத்துடன் போராடியுள்ளனர் , மத்திய அரசை எதிர்ப்போர் பல்வேறு பெயரில் போராட வந்துள்ளனர் . இதுவரை தமிழகத்தில் ஆளுநர் வாகனம் மீது எந்த  தாக்குதலும் நடந்தது இல்லை. அப்படி பட்ட தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் நம்மிடம் இருந்தனர்.

கருணாநிதியுடன் சித்தாந்த வேறுபாடு இருந்தாலும் அவர் இப்படி செயல்பட்டதில்லை, முதல்வர் அரசை இயக்குகிறாரா அல்லது வேறு யாரும் இயக்குகின்றனரா..? இதில் அரசியல் செய்வது முதல்வர்தான், பாஜக அல்ல.

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். இதில் 2021 முதல் எங்கள் ஆதரவு நிலைப்பாடு மாறவில்லை, மாறாது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் அதில் பங்கேற்று எங்களது கருத்தை கூறுவோம். 

வரும் 24-ல் அமித்ஷா புதுச்சேரி வருகிறார். ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதல் குறித்து நேரில் முறையிடுவோம். எனது கடிதம் குறித்து உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக  நடவடிக்கை எடுக்கும். ஆளுநரின் இன்றைய டெல்லி பயணம் தொடர்பாக நான் கருத்து கூற முடியாது. ஆளுநர் வேறு, பாஜக வேறு. 

இதுவரை அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் நடத்தியோர்தான்  இளையராஜாவுக்கு எதிராக குறை கூறுகின்றனர். இளையராஜா மோடியை ஒப்பிட்டதில்  என்ன தவறு? திருமாவளவன் என்னுடன் நேரில் விவாதிக்க தயாரா? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக விவாதிக்க திருமாவளவன் தயாரா.? 

மேலும் படிக்க | ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி

அருந்ததியர் சமூகத்தில் மிகப் பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜக பின்பற்றுவதால்தான் பாஜகவில்  இணைந்தார். இளையராஜாவுக்கு ராஜ்யசபா கொடுப்பதாக கூறினால் அவரது  தகுதியை அது  குறைக்கும். இளையராஜாவின் தகுதிக்கு பாரத ரத்னாவே குறைவுதான்.

ஆளுநருக்கு நேற்று நடந்தது மிகப்பெரும் தவறு. இது அதிகளவில் ஊடகங்களில்  பேசப்பட வேண்டும். ஆளுநர் குறித்து முதல்வர் சட்ட மன்றத்தில் பேசுவதும் , வெளியில் நடப்பதும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அந்நியன் பட அம்பி போல மாற்றி மாற்றி பேசுகிறார் முதல்வர். 

ஆளுநர் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுவது கண் துடைப்பு போல உள்ளது. முதல்வர் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமனால் IPC பிரிவு 124 ன் படி போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

நீட் தவிர்த்து மேலும் நிலுவையில் உள்ள 11 மசோதா குறித்து சபாநாயகருக்கு ஆளுநர் சில கேள்விகளை அனுப்பி உள்ளார். இதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். மசோதா குறித்த ஆளுநர் கேள்விகளுக்கு பதலளிக்காமல் ஆளுநர் மேல் அரசு பழிபோடுவது சரியல்ல."

இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசினார்.

மேலும் படிக்க | ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் கண்டிக்கதக்கது! எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News