IPL 2019 தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 42-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. பெங்களூரு அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்திவ் பட்டேல் 43(24) மற்றும் விராட் கோலி 13(8) ரன்களில் வெளியேற முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய வில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 82*(44) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 46*(34) ரன்கள் குவித்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க துவங்கியது.
லோகேஷ் ராகுல் 42(27), கிறிஸ் கெயில் 23(10), மயங்க் அகர்வால் 35(21), டேவிட் மில்லர் 24(25), நிக்கோலஸ் பூரான் 46(28) என அடுத்தடுத்து வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த இடை வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வெற்றியின் அருகே சென்ற பஞ்சாப் அணி கடைசி இரண்டு ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க வெற்றி இலக்கை எட்டாமல் 185 ரன்களுக்கு சுருண்டது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே குவித்து பஞ்சாப் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.