India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது எனலாம். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டு முறை தகுதிபெற்றும், ஒருமுறை கூட இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. SENA நாடுகளில் ஆஸ்திரேலியாவை தவிர வேறு எங்கும் டெஸ்ட் தொடர்களை வெல்லவில்லை. இருப்பினும், இந்திய அணி டெஸ்டில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
தற்போதும் கூட WTC தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்தைதான் பிடித்திருக்கிறது. ஆனால், இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தி வந்த ஆதிக்கம் தற்போது அவர்களை விட்டுச் சென்றுவிட்டது எனலாம். ஆஸ்திரேலிய மண்ணில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து, 2017ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியாவிடம் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்திருக்கிறது. இதைவிட மோசமானது, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் 0-3 என்ற கணக்கில் வைட்வாஷ் ஆனது.
ஜூன் மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
எனவே, 2024ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதனால், டெஸ்ட் அணிக்கு உடனே புத்துயிர் அளிக்க சில மாற்றங்களை செய்தாக வேண்டிய கட்டாயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தொடங்கி, தேர்வுக்குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில், இந்திய டெஸ்ட் அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இங்கு வரிசையாக காணலாம்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக டெஸ்ட் விளையாடிய 3 இந்திய பிளேயர்கள்..!
இந்திய அணி WTC பைனலுக்கு தகுதிபெறவில்லை. எனவே, ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர்தான் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் சுற்றுப்பயணம் எனலாம். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது கடினம் என்றாலும், கடந்த முறை விராட் கோலி தலைமையில் ஏறத்தாழ கோப்பையை நெருங்கிவந்தது. ஆனால், பும்ரா தலைமையிலான கடைசி போட்டியில் தோல்வியடைய இந்திய அணியின் கனவு மெய்ப்படாமல் போனது.
ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கூடாது
அப்படியிருக்க இங்கிலாந்து தொடரை வெல்ல வரும் ஜூன் மாதத்திற்குள் இந்திய அணி சில துணிச்சலான மாற்றங்களை செய்தாக வேண்டும். முதலில் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் முதல்தர போட்டிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். ஐபிஎல் தொடரில் ஜொலித்ததன் மூலம் மட்டும் ஒருவரை டெஸ்ட் அணியில் எடுப்பது சரியாக இருக்காது. எனவே, இந்திய அணியின் தேர்வுக்குழு இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
சீனியர்கள் ஓய்வை அறிவிக்கலாம்
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். கேப்டன்ஸி பும்ராவிடம் முழுமையாக ஒப்படைக்கப்படும்போது ரோஹித் சர்மா அணியில் தற்போதைக்கு தேவையில்லை எனலாம். இங்கிலாந்தில் ரோஹித், கோலி ஆகியோருக்கு பெரிய அனுபவம் இருப்பது உண்மை என்றாலும் வரலாற்றை மாற்ற வேண்டும் என்றால் கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
ரோஹித் இடத்தில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினால் அவரையே தொடரலாம். விராட் கோலி இடத்திற்கு சரியான நபர் கிடைக்கும் வரை அவரை விளையாட வைக்கலாம். விராட் கோலி இங்கிலாந்து தொடர் வரை மட்டும் வேண்டுமானால் விளையாடலாம். ஏனென்றால் பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷமி என பல சீனியர்கள் அணிக்குள் வருவதால் பார்மில் இல்லாத சீனியர்கள் அணியில் நீடிப்பது தவறானது. தோனியின் கைகளில் இருந்து விராட் கோலி எப்படி இந்திய டெஸ்ட் அணியை உருமாற்றம் செய்தாரோ அதேபோல் இப்போதும் உருமாற்றம் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது.
வேகப்பந்துவீச்சு அணுகுமுறையில் மாற்றம்
அதேபோல், சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருபுறம் இருக்க SENA நாடுகளில் வலிமையான வேகப்பந்துவீச்சு படையை கட்டமைப்பது முக்கியமாகும். பும்ரா, ஷமி போன்றோரை மட்டும் சார்ந்திருக்காமல் ஒட்டுமொத்தமாக பல மாற்றங்களை வேகப்பந்துவீச்சு பிரிவில் கொண்டுவர வேண்டும். அதிலும் முக்கியமாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு முக்கியத் தேவை எனலாம்.
நம்பர் 8இல் பிரீமியம் பௌலர்
வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி மிடில்-ஆர்டரில் விளையாடுவதுதான் இந்திய அணிக்கு நல்லது. இதனால், கூடுதலாக ஒரு பிரீமியம் பந்துவீச்சாளரை கீழ் வரிசையில் இந்தியா வைத்துக்கொள்ளலாம். மேலும், 8ஆவது வீரர் வரை ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என திட்டத்தை இந்தியா கைவிடுவது நல்லது. டெயிலெண்டர்கள் பேட்டிங்கில் பங்களிப்பது முக்கியம் என்றாலும் பேட்டிங்கிற்காக மட்டும் 8ஆவது வீரர் தேர்வு செய்யப்படுவது அணிக்கு சமநிலையை வழங்காது. அதுதான் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் (நிதிஷ் குமார் ரெட்டி) நிரூபணமானது.
நம்பர் 3 முக்கியம் பிகிலு...
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் அதிரடி பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது ஒருபுறம் இருந்தாலும் இந்திய அணி அதன் அணுகுமுறையை சரியாக வரையறுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 3இல் இறங்கும் பேட்டர் நாள் முழுக்க பேட்டிங் செய்பவராக இருக்க வேண்டும் என்பது அதிமுக்கியம். புஜாராவுக்கு பின் அந்த இடத்தில் சரியான வீரரை தேர்வுக்குழுவினர் பொருத்த வேண்டும். சாய் சுதர்சன் போன்றோர் இந்த இடத்திற்கு வரிசையில் நிற்பதையும் குறிப்பிட வேண்டும். இப்படி, பேட்டிங் ஆர்டர், பேட்டிங் அணுகுமுறை, வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு, தேர்வுக்குழுவின் அணுகுமுறை உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும், ஏற்படும் என நம்புவோம்...
மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த கேப்டன்... ரோகித் சர்மா கொடுத்த சிக்னல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ