ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Game Changer Movie Review: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 10, 2025, 01:34 PM IST
  • இன்று வெளியான இந்தியன் 2 படம்.
  • ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி உள்ளது.
  • ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! title=

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், நவீன் சந்திரா, வெண்ணேலா கிஷோர், விஜய கிருஷ்ண நரேஷ் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர்  நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை திருவும், படத்தொகுப்பை ஷமீர் முகமது மற்றும் ரூபன் ஆகியோர் செய்துள்ளனர். ஜப்பான், சீனா, மலேசியா, கம்போடியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு நடந்தது. முன்பே வெளியாக வேண்டிய கேம் சேஞ்சர் படம் இன்று 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..

படத்தின் கதை

ஐஏஎஸ் அதிகாரியான ராம்சரண் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்கிறார். அங்கு நடக்கும் மணற்கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம் போன்ற அநியாயங்களை தட்டி கேட்கிறார். இதனால் அமைச்சராக இருக்கும் எஸ்ஜே சூர்யாவிற்கும், ராம் சரணிற்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் அமைச்சர் எஸ்ஜே சூர்யாவை அடித்து விடுகிறார் ராம்சரண். இதனால் அவருக்கு சஸ்பென்ஷன் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே கேம் சேஞ்சர் படத்தின் கதை.

நடிகர்கள் நடிப்பு எப்படி?

ஒரே ஐஏஎஸ் அதிகாரியாக ராம்சரண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அப்பா,  மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில் வரும் நிறைய காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். சண்டை காட்சிகள், நடனம் என வழக்கம் போல தன்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸை இந்த படத்திலும் கொண்டு வந்துள்ளார்.

மோபிதேவி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ரசிக்க வைக்கிறார். ராம் சரணுக்கு அவருக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. பார்வதி என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி சிறிய கதாபாத்திரமே என்றாலும் ரசிக்க வைக்கிறார். தீபிகா என்ற கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி ராம் சரண் ஜோடியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியதுவம் இல்லை என்றாலும், அவரை சுற்றியும் சில காட்சிகள் நகர்கிறது. முனி மாணிக்யம் வேடத்தில் ஜெயராம், சைட் சத்யம் வேடத்தில் சுனில் சிரிக்க வைக்கின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக

படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் அசத்தி உள்ளார் தமன். பல சாதாரண காட்சிகள் கூட பின்னணி இசையில் சிறப்பாக உள்ளது. ஷமீர் முகமது மற்றும் ரூபன் எடிட்டிங் நன்றாக இருந்தாலும், இன்னும் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம். திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நன்றாக இருந்தது. பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேல்யூஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் பிரமாண்டமாக உள்ளது.

படம் ஒர்த்தா?

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால் அதற்கு அடுத்ததாக வெளியாகும் கேம் சேஞ்சர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதால் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் கதையை அடிப்படியாக வைத்து கேம் சேஞ்சர் படத்தை உருவாக்கி உள்ளார். அவரது முந்தைய படங்களான முதல்வன் மற்றும் சிவாஜி படத்தில் இருந்து நிறைய காட்சிகளை இதிலும் வைத்துள்ளார். முதல் பாதியில் உள்ள நிறைய காட்சிகள் அவரது பழைய படங்களை நியாபகப்படுத்தின.

இடைவேளி காட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமாக இருந்தது. அதன் பிறகு படம் எப்படி நகரும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுத்தது. இடைவேளிக்கு பிறகு வரும் 20 நிமிட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. இருப்பினும் பல காட்சிகள் இரண்டாம் பாதியில் ஒட்டவில்லை. என்னதான் கமர்சியல் படம் என்றாலும், ஏகப்பட்ட இடங்களில் லாஜிக் மீறல்கள் உள்ளன. பழைய ஷங்கரை பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் புலம்பும் சத்தம் தமனின் இசையை தாண்டியும் கேட்கிறது. ஒரு ஐஏஎஸ் மற்றும் அமைச்சரின் பவரை காட்டாமல், பல இடங்களில் வசனங்களின் மூலமே நகர்த்தி கொண்டு சென்றுள்ளனர். இந்தியன் 2 அளவிற்கு இல்லை என்றாலும், கேம் சேஞ்சர் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்.

மேலும் படிக்க | கேம் சேஞ்சர் படம் எப்படி? வெளியானது முதல் விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News