உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணியின் தோல்விக்கு காவி நிற ஜெர்சியே காரணம் என மெகபூபா முப்தி விமர்சனம்!!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோ நிலைத்து நின்று 111 ரன்களைக் குவித்தார். ஜேசன்ராய் 66 ரன்களும், ஜோ ரூட் 44 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், ரோஹித் சர்மா- விராட் கோலி ஜோடி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தது. ரோஹித் சர்மா 102 ரன்களும், கோலி 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹார்திக் பாண்டியா 45 ரன்களும், ரிஷப் பந்த் 32 ரன்களும் சேர்த்தனர். 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்திய அணி முதல் தோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியை உலகக்கோப்பைப் போட்டியில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி.
இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை கூறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, இந்திய அணியின் தோல்வி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சி தான்" என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Call me superstitious but I’d say it’s the jersey that ended India’s winning streak in the #ICCWorldCup2019.
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 30, 2019
இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டுள்ளது.