Manipur Violence: கடந்த 16 மாதங்களாக வன்முறை நடைபெற்று வரும் மணிப்பூரில் அமைதி திரும்பக் கோரி நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளது. மாணவர் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அங்கு ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதுடன் இணைய சேவையும் முடக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன
மணிப்பூர் அரசின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, நேற்று (செவ்வாய்கிழமை) பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாணவர் இயக்கம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணிப்பூர் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 8 முதல் மணிப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2000 சிஆர்பிஎப் வீரர்கள் நிறுத்தம்
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பத்தால் பலர் காயமடைந்தனர். மணிப்பூரில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவம் அதிகரித்து வருவதால், 2000 சிஆர்பிஎப் வீரர்களை மாநிலத்திற்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, சுராசந்த்பூர், நோனி, ஜிரிபாம், காங்போக்பி மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் ஏற்கனவே 16 சிஆர்பிஎப் பட்டாலியன்கள் மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
செப்டம்பர் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் மெய்தே பகுதிகளில் ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியப் படைகள் மௌனம் காப்பதாகக் குற்றம்சாட்டிய மாணவர்கள் அமைப்பு, அவர்கள் எங்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க - Manipur: மணிப்பூர் வன்முறைக்கு காரணமான உத்தரவை திரும்ப பெற்ற உயர் நீதிமன்றம்
ராஜ்பவன் மீது கற்கள் வீசப்பட்டன
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்து வருவதைக் கண்டித்து மெய்தே சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிஷாம்பட்டில் உள்ள திடிம் சாலையில் 3 கிலோமீட்டர்கள் பேரணியாகச் சென்ற பின்னர், போராட்டக்காரர்கள் ராஜ்பவன் மற்றும் முதல்வர் மாளிகையை அடைந்து ஆளுநர் மற்றும் முதல்வரிடம் மனு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பின்னரும், மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அளித்த கோரிக்கைய உடனடியாக நிரவேற்ற வேண்டும், அது நிறைவேறும் வரை இங்கேயே இருப்போம் என மாணவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்டு பாதுகாப்புப் படையினருடனும் மோதலில் ஈடுபட்டார்கள். செப்டம்பர் 9 அன்று, இம்பாலில் உள்ள ராஜ் பவனில் நூற்றுக்கணக்கான போராட்ட மாணவர்கள் கற்களை வீசினர்.
கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி பேரணி சென்ற பெண்கள்
மணிப்பூரில் நடைபெற்று வரக்கூடிய வன்முறையை மற்றும் ட்ரோன் தாக்குதலை கண்டித்தும் இம்பாலில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுடைய கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி பேரணியாக சென்றது, நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. ட்ரோன் தாக்குதலை முறியடிக்க அசாம் ரைபில் படையினர் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாநிலத்திற்கு ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகளும் கொண்டுவரப்பட்டு துணை ராணுவ படையினர் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் மாநிலத்தில் தொடரும் வன்முறை
மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை சம்பவத்தால் இதுவரை 200-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். குக்கி சமூகத்திற்கும் மெய்தி சமூகத்திற்கும் இடையிலான இடஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாநிலத்தில் வன்முறை தொடங்கியது.
மேலும் படிக்க - Manipur Violence: மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒருவர் கைது!
மணிப்பூர் வன்முறைக்கு என்ன காரணம்?
மணிப்பூரின் மக்கள் தொகை சுமார் 38 லட்சம். இங்கு மூன்று முக்கிய சமூகங்கள் உள்ளன மைதேயி, நாகா மற்றும் குகி. மைதேயி சமுகத்தினர் பெரும்பாலும் இந்துக்கள். நாகா மற்றும் குக்கி கிறித்துவத்தை பின்பற்றுகிறார்கள். அதாவது எஸ்டி (ST) பிரிவின் கீழ் சலுகை பெற்று வருகிறார்கள்.
மணிப்பூரை பொறுத்த வரை மைதேயி சமுகத்தினரின் மக்கள் தொகை சுமார் 50 சதவீதம். மாநிலத்தின் சுமார் 10 சதவீதம் பரப்பளவைக் கொண்ட இம்பால் பள்ளத்தாக்கு முழுவதும் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாகா-குகி சமுகத்தினரின் மக்கள் தொகை சுமார் 34 சதவீதம். இந்த மக்கள் மாநிலத்தின் 90% பரப்பளவில் வாழ்கின்றனர்.
மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மைதேயி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவாகரம் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தை அடைந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மைதேயி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்த விவகாரம் தான் சர்ச்சையை தொடங்கி வைத்தது.
நாகா-குகி இரண்டு பழங்குடியினரும் மைதேயி சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கின்றனர். மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் இம்பால் பள்ளத்தாக்கில் ஏற்கனவே மைதேயி சமூகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் (Schedule Tribes) பிரிவில் இடஒதுக்கீடு அளித்தால், எங்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பரிக்கப்படும். எனவே அவர்களுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கக்கூடாது என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள், 20 எம்.எல்.ஏக்கள் நாகா-குகி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை 12 முதல்வர்களில் இருவர் மட்டுமே பழங்குடியினராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மணிப்பூர் வன்முறை தொடர்வதற்கு வெளிநாட்டு சதியும் காரணமாக இருக்கலாம்! உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ