ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகன் புல்கீத் கெஜ்ரிவால் CBSE 12-ஆம் வக்குப்பு தேர்வில் 96.4% மதிப்பெண் பெற்றுள்ளார்!
நாடு முழுவதும் இந்தாண்டு CBSE 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இதில் 12-ஆம் வகுப்பு தேர்வில், 12.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இத்தேர்வின் முடிவுகள் மே மாதம் மூன்றாம் வாரத்தின் வாக்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று CBSE 12-ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகளை மத்திய பள்ளி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. தேர்வின் முடிவுகள் CBSE-ன் அதிகாரப்பூர்வ வலைதளமான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்களுடன் காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி ஹன்சிகா சுக்லா, முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா அரோரா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகன் புல்கித் கெஜ்ரிவால், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் CBSE 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து புல்கீத்துக்கு டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோதயா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவரது தாயார் சுனிதா கெஜ்ரிவால் தெரிவிக்கையில்., ‘கடவுளின் அருளாளும், நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்தினாலும் புல்கீத் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4% மதிப்பெண்கள் பெற்றுள்ளான்’ என குறிப்பிட்டுள்ளார்.
With God’s grace and well-wishers’ blessings son has secured 96.4 percentile in CBSE Class XII. In high gratitude
— Sunita Kejriwal (@KejriwalSunita) May 2, 2019
கடந்த 2014-ஆம் ஆண்டு, CBSE 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா 96% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் மகன் ஜோகர் இரானி 91% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.