சென்னை: ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
அப்போது, ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு டாக்டர் சுதா ஷேசய்யன் விளக்கம் அளித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று உறுதியாக தெரிவித்த சுதா, ஜெயலலிதாவின் உடல் 5-ம் தேதி 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது என்று கூறினார்.
இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில், பல்வேறு தரப்பினரும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. இதே போன்று எம்ஜிஆர் மரணம் அடைந்த போதும் செய்யப்பட்டது என்று டாக்டர் சுதா விளக்கம் அளித்தார்.
மேலும், ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள் குறித்த கேள்வி பதில் அளித்த அவர் தான் அந்த மாதிரி எதையும் பார்க்கவில்லை என்று டாக்டர் சுதா கூறினார்.
மேலும், உடலை பதப்படுத்தும் போது ஐந்தரை லிட்டர் திரவம் உள்ளே செலுத்தப்படும். அப்போது கூட அவருக்கு கன்னத்தில் எந்தவிதமான ஓட்டைகளையும் தான் பார்க்கவில்லை, அவர் ஆடலில் எந்த வித ஓடையும் இல்லை என்று டாக்டர் சுதா உறுதியாக கூறினார்.