Actress Vinodhini Left MNM Party, Latest News Updates: தமிழ் சினிமாவின் முன்னணி துணை நடிகையாக வலம் வருபவர், வினோதினி (Actress Vinodhini). இவர் 2011ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகை அனன்யாவின் கதாபாத்திரத்திற்கு அண்ணியாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் எனலாம். அதை தொடர்ந்து, கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, பிசாசு, ஓ காதல் கண்மணி, ஆண்டவன் கட்டளை என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.
இவர் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அரசியல் கருத்து நிறைந்த நகைச்சுவையான வீடியோக்களை அடிக்கடி பதிவிடுவார். அதன்மூலம் இவர் நெட்டிசன்கள் மத்தியில் நன்று அறியப்பட்டவர் எனலாம். இவர் நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். 'மய்யத்தில் இருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்' என நடிகை வினோதினி அவரது X பக்கத்தில் இன்று அதிகாலை 2.54 மணியளவில் பதிவிட்டுள்ளார்.
நடிகை வினோதினி: நள்ளிரவில் போட்ட நீண்ட பதிவு
அவர் பதிவிட்டுள்ள நீண்ட பதிவு பின்வருமாறு:"அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.
மேலும் படிக்க | சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! ஆபாச இன்ஸ்டா பிரபலம் உள்பட 4 பேர் கைது-ஷாக் பின்னணி
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோ சாலையில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது.
நடிகை வினோதினி: மநீம கட்சியில் இருந்து விலகியது ஏன்?
இந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.
பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது - கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.
நடிகை வினோதினி: 'அது என்னிடம் இல்லை'
அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் - career politicianகளைவிட businessmanஆன Trump எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவின் founding fathersஉம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலில் இருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.
மேலும் படிக்க | திமுக கொடி கட்டிய காரில் பெண்களை விரட்டி அடாவடி!
நடிகை வினோதினி: மகத்தான தலைவனை தவறவிட்ட தமிழ்நாடு
கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் 'நம்மவர்' என்பது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனையே குறிக்கும்.
தொடர்ந்து வினோதினி அந்த பதிவில்,"என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
நடிகை வினோதினி: 'தொடர்ந்து பயணிப்போம்...'
65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.
அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பிரபலமானவர்கள் எல்லாம் அறிவாளியா? விஜய்யை தாக்கி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி?
கமல்ஹாசன் - மநீம அரசியல் பயணம்
2018ஆம் ஆண்டு மதுரையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே அக்கட்சி 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் மநீம வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மநீம, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி (இப்போது பாஜகவுடன் இணைக்கப்பட்டுவிட்டது) உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. மநீம மட்டும் 142 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. அத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியடைந்து 2வது இடத்தையே பிடித்தார்.
தற்போது 2024 மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேர்ந்த மநீம ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை. இருப்பினும், கமல் திமுக கூட்டணி கட்சிக்கு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தாண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கமல் ஹாசனுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ