சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது!
சேலம்-சென்னை நகரங்களுக்கு இடையே பசுமை வழி சாலை அமைப்பதற்காக, விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தவதாக தொடர்ந்த வழக்கில், நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாமக, நில உரிமையாளர்கள், விவசாயிகள் தொடுத்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவினை பிரப்பித்துள்ளது.
சென்னை-சேலம் நகரங்களுக்கு இடையே 10,000 கோடி ரூபாய் செலவில் 8 வழி சாலை எனப்படும் பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் எஞ்சிய நிலங்களை விற்கவோ, வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த மறுஉத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்துள்ளது!