காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளின்படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
காவிரி மேலாண்மை ஆணையம் “தபால் அலுவலகம்” போல் செயல்படும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. “சட்டப் போராட்டம் மூலம் சகல அதிகாரமும் உள்ள ஆணையம் அமைத்து விட்டோம்” என்று தம்பட்டம் அடித்த அதிமுக அரசு, இன்றைக்கு அந்த ஆணையம் போட்ட முதல் உத்தரவையே அவமதித்துள்ள கர்நாடக அரசை தட்டிக் கேட்க முடியாமலும், மத்திய பா.ஜ.க. அரசிடம் வலியுறுத்தத் துணிச்சல் இல்லாமலும் அஞ்சி - தமிழக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக, ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி நீரும் திறந்து விடப்படவில்லை. இப்போது இரண்டாவதாக ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுங்கள் என்று போட்ட உத்தரவின்பேரில் 31.24 டி.எம்.சி நீரும் திறக்கப்படவில்லை. “காவிரியில் நீர்வரத்து இருந்தால் ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுங்கள்” என்று காவிரி மேலாண்மை ஆணையம் போட்டிருக்கும் இரண்டாவது உத்தரவு உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறிய செயல் மட்டுமல்ல- பல் இல்லாத ஆணையம் பவர் இழந்து, கோலூன்றிக் குனிந்து நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. பொறுப்புத் தலைவரின் கீழ் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்திடமிருந்து இதை விட அதிகமாக தமிழக விவசாயிகள் எதிர்பார்க்க முடியாத கீழ்மை நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, காவிரி ஆணையத்திற்கு உடனடியாக நிரந்தரத் தலைவர் நியமிக்கவும், இதுவரை ஆணையம் போட்டுள்ள இரு உத்தரவுகளின் அடிப்படையில் 40.43 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைச் சகாரா பாலைவனமாக்கும் விதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவினை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மக்களையும், விவசாயிகளையும், வேளாண்மையையும் போற்றி நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.