தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற எண்ணத்தில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. பல ஆண்டுகளாக அப்பகுதியில் சத்யா அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். அப்பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இதுக்குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,
கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது.
தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.